70 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம்! சிறையில் நாமல் ராஜபக்சவிடம் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் கிரிஷ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் வர்த்தகப் பிரமுகருமான ஜானகி சிறிவர்தன, நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் அவர் செப்டம்பர் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கொழும்பு கோட்டையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் (UDA) சொந்தமான காணி ஒன்றை கிரிஷ் டிரான்ஸ்வேர்க்ஸ் கொழும்பு (தனியார்) நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்வதற்கும், அதற்குத் தேவையான அனுமதிகளை துரிதப்படுத்துவதற்கும் உதவியளிப்பதற்காக, நாமல் ராஜபக்சவுக்கு மூன்று சந்தர்ப்பங்களில் மொத்தம் 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாக ஜானகி சிறிவர்தன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்கு அமைவாக நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
அதனடிப்படையில், அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.