துருக்கி இரும்பு தொழிற்சாலை வெடி விபத்து : 17 பேர் உயிரிழப்பு
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்மிர் நகருக்கு அருகிலுள்ள இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அலியாகா பகுதியில் அமைந்துள்ள ஹபாஸ் தொழிற்சாலையில் பராமரிப்புப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கிரேன் சரிந்து உலைக்குள் வீழ்ந்ததில் வெடிப்பு
மாற்று சூடேற்றி ஒன்றை ஏற்றிச் சென்ற கிரேன் சரிந்து உலைக்குள் வீழ்ந்ததில், வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
தொழிற்சாலையின் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.