தமிழர் பகுதியில் பூட்டப்பட்ட வீட்டை உடைத்து திருட்டு - விசாரணையில் சிக்கிய இருவர்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரதிதிபுரம் கிராமத்தில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் வீடு ஒன்றைய உடைத்து திருடிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 7ஆம் திகதி போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களும் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளனர்.

இதன்போது, 125 ஆயிரம் ரூபாய் பணம், 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் திருட்டு போயுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில், வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
புதுக்குடியிருப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலீஸ் பரிசோதகர் சிறீவன்ச,பொலீஸ் சாயன்ட் 45555 அஜித் 88582 ஜெனன் உள்ளிட்டவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்கள் 80 ஆயிரம் பெறுமதியான தொலைபேசியை, 8 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரில் ஒருவர் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்ட பின்னர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.