ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த மற்றுமொரு வழக்கு தினசரி விசாரணைக்கு..!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மற்றுமொரு வழக்கு தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
புத்தளம் - வனத்தவில்லு, லஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தமை தொடர்பான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை செய்ய கொழும்பு மேல்நீதிமன்ற மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்
லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகியோர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என 4 ஆம் மற்றும் 6 ஆம் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் இவர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டதால் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டமையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.
சிறைச்சாலை மாற்றத்தின் போது தங்களது வழக்கு ஆவணங்களை எடுத்து வர இயலாமல் போனதாக பிரதிவாதிகள் சுட்டிக்காட்டினர். முன்வைக்கப்பட்ட காரணிகளை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், குறித்த ஆவணங்களை நாளைய தினத்திற்குள் அவ்விரு பிரதிவாதிகளுக்கும் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
வெடிபொருட்கள் கைவசம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து பெருந்தொகையான வெடிபொருட்களை கைவசம் வைத்திருந்தமை தொடர்பில் சட்டமா அதிபரால் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அபூ ஹனீஃபா மொஹமட் முஸீஃப் (அபூ தஹிதா), அமீர் ஹம்ஸா மொஹமட் ஹமாஸ், மொஹமட் ஷரீஃபு ஆதம் லெப்பே, மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமடூ இப்ராஹிம் மொஹமடூ நௌஃபர் மற்றும் மொஹமட் ரமீஷ் மொஹமட் சாஜித் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர்களில் நால்வர் பிரதான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் புத்தளம் - வனத்தவில்லு, லஸ்டோஸ் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
வெடிபொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நைட்ரேட் தொகை, நைட்ரிக் அமிலம் மற்றும் யூரியா தொகை மற்றும் துப்பாக்கி ஒன்று மற்றும் 12 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
குறித்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அதன்பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி முதல் தினசரி அடிப்படையில் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தின் மூலம் இராணுவத்துக்குப் பொலிஸாரின் அதிகாரங்கள்! மொட்டு தரப்பு கடும் கண்டனம்