ஐரோப்பா செல்ல முயன்ற தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
போலி ஆவணங்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமான் ஊடாக ஐரோப்பா செல்ல முற்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான தமிழ் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 05.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த, குறித்த நபர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு கரும பீடத்தில் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
எல்லை கண்காணிப்பு பிரிவு
இதன்போது குடிவரவு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் குறித்த இளைஞன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, இந்த கடவுச்சீட்டு போலியானது எனவும் அதில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் மற்றும் முத்திரைகளும் போலியானவை என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தரகருக்கு 30 இலட்சம் ரூபாய் பணம் வழங்கி குறித்த கடவுச்சீட்டை பெற்றதாகக் கூறியுள்ளார்.