ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வழக்குப்பதிவு!
சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எந்தவித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில் தனது நாட்டிற்குத் திரும்ப அழைத்து வந்தது.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 34 வயதுடைய பெண் ஒருவர் மீது அவுஸ்திரேலிய பொலிஸ் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியா வந்தடைந்த அந்தப் பெண், நேற்று(28.05.2026) மெல்பர்ன் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தது மற்றும் தடைசெய்யப்பட்ட போர் மண்டலத்திற்குள் நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றங்களுக்கு அவுஸ்திரேலியச் சட்டப்படி 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியக் கூட்டாட்சிப் பொலிஸ் உதவி ஆணையர் ஹில்டா சைரெக் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்தப் பெண் கடந்த 2013 அல்லது 2014ஆம் ஆண்டில் சிரியாவிற்குப் பயணம் செய்ததாகவும், பின்னர் 2019-இல் குர்திஷ் படைகளால் பிடிக்கப்பட்டு அல்-ஹோல் முகாமில் தனது குடும்பத்தினருடன் அடைக்கப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிரியாவின் ரோஜ் முகாமில் இருந்து இந்த மாத தொடக்கத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு அழைத்து வரப்பட்ட பெண்களில், கவ்சர் அகமது, ஜைனப் அகமது ஆகிய தாய் மற்றும் மகள் மீது அடிமைப்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டுகளும், ஜானை சஃபார் என்ற மற்றொரு பெண் மீது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததற்கான குற்றச்சாட்டுகளும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மனித உரிமை அமைப்பு
சிரியாவில் இருந்து திரும்பிய அனைத்து பெரியவர்களிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதில் ஏற்படும் காலதாமதம் விசாரணை நிறுத்தப்பட்டதைக் குறிக்காது என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் அவுஸ்திரேலிய அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
இவர்கள் நாடு திரும்புவதற்கு அரசாங்கம் எந்தவித உதவிகளையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டதோடு, நீங்கள் செய்த படுக்கையில் நீங்கள்தான் படுக்க வேண்டும் (தங்கள் செயல்களின் விளைவுகளை அவர்களே அனுபவிக்க வேண்டும்) என எச்சரித்துள்ளார்.
எனினும், மனித உரிமை அமைப்புகள் தங்களது சொந்த நாட்டு குடிமக்கள் தாயகம் திரும்புவதற்கான உரிமையை அவுஸ்திரேலியா மதிக்க வேண்டும் என்றும், குறிப்பாக பெற்றோர்கள் செய்த தவறுகளுக்குக் குழந்தைகளைப் பொறுப்பாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றன.
மட்டக்களப்பு விடுதியில் இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri