புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது – பைசர் முஸ்தபா
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை' மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.
இச்சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியல் சுதந்திரம், தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பின்னர் திருத்தச் சட்டத்தின் மூலம் நிரந்தரமாக்கப்பட்டு பொதுமக்களின் சுதந்திரத்திற்குப் பெரும் சவாலாக அமைந்திருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
கடந்த 47 ஆண்டுகளாகப் பல அரசாங்கங்கள் அதனை நீக்குவதாக உறுதியளித்த போதிலும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவே அச்சட்டத்தைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' என்பதற்கான வரைவிலக்கணம் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அரசியல், கருத்தியல் மற்றும் பொருளாதார உரிமைகள், அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களும் கூட இதன் வரம்பிற்குள் கொண்டுவரப்படக்கூடிய அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசியல் போட்டிகளுக்கு இச்சட்டமூலத்தின் சரத்துக்கள் பயன்படுத்தப்படலாம் எனவும், தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
அத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சரத்துக்களை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். சட்டத்தரணி - வாடிக்கையாளர் இரகசியத்தன்மைக்கு இச்சட்டமூலத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர் தனது கரிசனையை வெளிப்படுத்தினார்.
சட்டபூர்வமான தன்மையை மட்டும் பார்க்காமல், அதற்கு அப்பால் சிந்திக்குமாறு அரசாங்கத்தை நான் மிகவும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு தேவையா என்பது சட்ட ரீதியான விடயம். ஆனால் அதையும் தாண்டி ஒரு பாரிய பிரச்சினை இதில் உள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் குறித்துப் பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஏனைய தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை நடத்துமாறு அழைப்பு விடுத்தார்.
இச்சட்டம் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதனை முன்னெடுப்பதற்கு முன்னர் அந்த விளைவுகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.