மட்டக்களப்பில் அரச காணியை அபகரிக்க முயற்சி: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) - திராய்மடு பகுதியில் 27 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கம்பி வேலியடைத்து கையகப்படுத்திய 8 பேருக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு காணி மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் (V. Vasudevan) தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கையானது, நேற்றைய தினம் (30.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு சொந்தமான திராய்மடு பிரதேசத்திலுள்ள 27 ஏக்கர் 10 பேச் கொண்ட அரச காணியை கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக அபகரிக்க முயற்சித்த 8 பேர் காணியை சுற்றி கம்பி வேலிகள் இட்டு தமது காணி என தெரிவித்துள்ளனர்.
வழக்கு தாக்கல்
இந்நிலையில், குறித்த நபர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு பிரதேச செயலாளர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணைக்காக நேற்று எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவானால் 8 பேரையும் உடன் வெளியேற்றுமாறும் அடைக்கப்பட்ட கம்பிவேலிகளை அகற்றி காணியை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் நீதிமன்ற பதிவாளர், பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பொலிஸாருடன் குறித்த காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணியை மீட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |