கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் - இந்திய பெண் மகிழ்ச்சி
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து அதிகாரியின் செயலால் இந்திய பயணி ஒருவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
தொடருந்தின் சொகுசு பெட்டியில் பயணித்த 24 வயதான இந்திய பெண் ஒருவர் நான்கரை லட்சம் ரூபாய் பெறுமதியான மடிக்கணினி மற்றும் அதன் பாகங்கள் அடங்கிய பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்த பையை கண்ட தொடருந்து பாதுகாப்பு அதிகாரி, குறித்த பெண்ணை தேடி ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
தொடருந்து நிலைய அதிகாரி
மாளிகாவத்தை தொடருந்து பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் கபில மாரசிங் என்பவரே இந்த முன்மாதிரிகையான செயலை செய்துள்ளார்.
மாளிகாவத்தை தொடருந்து நிலையத்திற்கு தொடருந்தில் வரும் போது அதனை அவதானித்த அதிகாரி பையை கொண்டு வந்து மாளிகாவத்தை தொடருந்து நிலைய உப பொலிஸ் பரிசோதகர் நந்தன பெரேராவிடம் கையளித்துள்ளார்.
நேர்மையான செயல்
இந்திய பெண் பையைத் தேடி வந்த நிலையில் அவரிடம் குறித்த பை ஒப்படைக்கப்பட்டது. பையை ஒப்படைத்ததற்காக அவர் மாரசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பையை மீண்டும் கண்டுபிடிப்பேன் என ஒரு நொடிகூட நினைக்கவில்லை எனவும் அதிகாரியின் இந்த நேர்மையான செயலை பாராட்டியதுடன் தொடருந்து பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவர் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |