முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான அரச நிதி முறைகேடு வழக்கு, ஒரு மாத காலப்பகுதியில் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று(19) கொழும்பு நீதவான் நீதின்றில் அறிவித்தார்.
தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காக பொதுமக்களின் நிதியில் இருந்து ரூ. 16.6 மில்லியனைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில் ரணில் விக்ரமசிங்க தற்போது பிணையில் உள்ளார்.
மனு மீதான விசாரணை
இந்த வழக்கில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சமன் ஏக்கநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, தனது வாடிக்கையாளர் பிரசவத்திற்காக தயாராகும் தனது மகளை வெளிநாட்டில் சந்திக்க விரும்புவதால், பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரினார்.
எனினும், சர்ச்சைக்குரிய பயணத்திற்காக நிதியை அனுமதித்ததில் சமன் ஏக்கநாயக்க முக்கிய நபர் என்பதால், அவரது கோரிக்கைக்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் ஆட்சேபனை தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மேலும், விசாரணைகள் 99% நிறைவடைந்துள்ளதாகவும், கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்ட வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்புக் கடிதம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார் .
இந்த சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, சமன் ஏக்கநாயக்க தரப்பில் வெளிநாடு செல்வதற்கான கோரிக்கை மீளப் பெறப்பட்டதுடன், வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.