ஹட்டனில் தங்க சங்கிலியுடன் தப்பிச் சென்ற சந்தேக நபருக்கு விளக்கமறியல்
ஹட்டன் பிரதான நகரத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூபா 289,000 மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், நேற்று (24) இரவு, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (25) ஹட்டன் நீதவான் எஸ். ராமூர்த்தி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரை இந்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பரபரப்பு சிசிடிவி காட்சி
பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான கிவ் தோட்டத்தின் மேல் பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்தவர் போல் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளைப் பார்வையிட்டு பின்னர் ஒரு சங்கிலியை பார்த்து கொண்டிருப்பது போல் எடுத்துக் கொண்ட நிலையில், திடீரென கடையிலிருந்து தப்பியோடியுனார்.
குறித்த மர்ம நபரின் செயற்பாட்டையும் தங்க சங்கிலியை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடும் பரபரப்பு சிசிடிவி காட்சியையும் அடிப்படையாகக் கொண்டு ஹட்டன் பொலிஸாருக்கும் கிடைக்கப்பெற்ற தகவலை கொண்டு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்ததாகவும், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஹட்டன் பொலிஸ் தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர் உட்பட, சோதனை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடகு வைப்பு
சந்தேக நபர் தங்க நகையை எடுத்துக்கொண்டு ஹட்டனில் இருந்து வட்டவளை வரையிலான தொடருந்து பாதையில் நடந்து சென்று நாவலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூபா 169,000க்கு தங்க நகையை அடகு வைத்து பணத்தைப் பெற்று கொண்டுள்ளார்.

பின்னர், கொழும்பு பகுதியில் படிக்கும் தனது குழந்தைக்கு பணத்தையும், மீதமுள்ள பணத்தில் ஒரு பகுதியை கடன் வழங்குபவர்களுக்கும் கொடுத்ததாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்து போது அவரிடம், ரூபா 10,000 மட்டுமே இருந்ததாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




