தற்போதைய அரசும் உலக நாடுகளை ஏமாற்றிவிட்டது.. சர்வதேச மன்னிப்புச் சபை பகிரங்கக் குற்றச்சாட்டு
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறி, தற்போதைய அரசு உள்ளடங்கலாக அடுத்தடுத்து ஆட்சிப்பீடமேறிய அரசுகள் உலக நாடுகளை ஏமாற்றி விட்டன என சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையாகச் சாடியுள்ளது.
ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, சர்வதேச மன்னிப்புச் சபையின் உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விசேட பதிவிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பக்கச்சார்பற்ற விசாரணை
'எக்ஸ்' தளப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"போரில் உயிர் பிழைத்தவர்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடி, உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூருவதுடன், தாம் அனுபவித்த வரலாற்றுத் துயரங்களுக்குத் தாமாகவே சாட்சியாக எழுந்து நிற்கின்றனர்.

மோதலின்போது நிகழ்த்தப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பன உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலகுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றது.
பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு சர்வதேச ரீதியாகப் பலமுறை வாக்குறுதியளித்த போதிலும், அவை அனைத்தும் வெற்று வார்த்தைகளாகவே போயின.

இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் 'தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு' , நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளை முற்றிலும் சீர்குலைத்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின்படி, நீண்டகாலமாகத் தொடரும் எமது இனப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் கடந்தகால மீறல்களுக்கான சர்வதேசப் பொறுப்புக்கூறல் என்பன முறையாக நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, தற்போதைய அரசுடன் எந்தவொரு அர்த்தமுள்ள ஒத்துழைப்பையும் முன்னெடுக்க முடியும் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.