அம்பாறையில் சுற்றுலாப் பயணிகள் செய்த நெகிழ்ச்சி செயல்
அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பை பகுதிக்குச் சுற்றுலா வருகை தந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இருவர், உள்ளூர் இஸ்லாமியக் கலாச்சாரத்தை மதித்து ஹிஜாப் ஆடை அணிந்து மகிழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அருகம்பையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடல் பயண மேற்கொண்டு பொழுதைக் கழித்துள்ளனர்.
நெகிழ்ச்சி சம்பவம்
இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர் ஒருவர் வீட்டிற்கு விஜயம் செய்த அவர்கள், அவரது குடும்பத்தினரின் உபசரிப்பிலும், விருந்தோம்பலில் பங்கேற்றனர்.

இதன்போது, பொத்துவில் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் ஆச்சரியத்துடன் நோக்கிய அந்த இளம் பெண்கள், உள்ளூர் கலாச்சாரத்தின் மீதான விருப்பத்தினால் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ‘ஹிஜாப்’ ஆடையைக் கேட்டு வாங்கி அணிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துத் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
அருகம்பைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுபோக்குச் சேவைகளை வழங்குவதுடன் மட்டுமன்றி, பிராந்தியத்தின் தனித்துவமான கலாச்சாரத்தையும் நற்பண்புகளையும் அவர்களிடம் எடுத்துரைத்து நன்மதிப்பைப் பெற்று வரும் இந்த செயற்பாடு அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது.



