கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பைகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் பை ஒன்று நேற்று பிற்பகலில் விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த பையை சோதனையிட்ட அதிகாரிகள் ஒரு கோடி 68 லட்சத்து 3750 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையொன்றும், மனித தோலை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் கிறீம் வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட பைகள்
குறித்த சிகரெட்டுகள் மற்றும் கிரீம்கள் அனைத்தும் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகுதியில், 111,400 சிகரெட்டுகள் அடங்கிய பெட்டிகளும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் முறையான அனுமதியின்றி நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் 125 கிறீம் போத்தல்களும் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொண்ட விமான நிலையச் சுங்க அதிகாரிகள், சிகரெட் மற்றும் கிறீம் தொகையை பறிமுதல் செய்து, அவற்றை எதிர்வரும் நாட்களில் அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.