டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
தனியார் நிறுவனமொன்றுக்கு 290 மில்லியன் ரூபா தொகையைச் செலுத்தாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள் அச்சிடுவதற்குத் தேவையான காகிதம் மற்றும் அட்டை இறக்குமதிக்காக கேசர லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 290 மில்லியன் தொகையைச் செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மீண்டும் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாக கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (16)வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக, இவ்வழக்கை 2027 மார்ச் 3 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக, கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(16) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

டிரான் அலஸ் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து நீதிமன்றத்தில் சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சாட்சியங்களைச் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இச்சம்பவம் தொடர்பாக டிரான் அலஸ் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அவரது கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காக ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பிணையில் செல்ல அனுமதி
இந்தப் பரிவர்த்தனை ஒரு வணிகப் பரிவர்த்தனை என்றும், இது ஒரு குற்றவியல் வழக்கு அல்ல என்றும் தாங்கள் விசாரணை அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளதாகவும், ரிட் மனு எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியது.
அதே நேரம் டிரான் அலஸின் சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் ஜனவரி 29 ம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, டிரான் அலஸை ஒரு சந்தேக நபராகப் பெயரிட்டு, வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டிருந்தது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சிலோன் செய்தித்தாள் நிறுவனத்தின் கணக்காளர் மற்றும் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.