அவதானத்துடன் செயற்படவும்..! வெள்ளப்பெருக்கு நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் உள்ள பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கு நிலையை எட்டும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய ஆற்றுப்படுகைகளில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழைவீழ்ச்சி
கீழ் ஜின் கங்கை பகுதியில், பத்தேகம அருகே பல இடங்களில் சுமார் 125 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேல் களு கங்கை படுகையில் உள்ள இரத்தினபுர பகுதியில் சுமார் 75 மில்லிமீட்டர் மழையும், கீழ் படுகையில் உள்ள கெஸ்பேவா அருகே உள்ள பகுதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு அருகே உள்ள பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மகாவலி ஆற்றின் மேல் படுகைப் பகுதிகளைச் சேர்ந்த பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் 50 முதல் 75 மி.மீ வரையிலும், அம்பாறையில் உள்ள கல் ஓயா படுகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 100 மி.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மட்டிக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 75 மி.மீ மழையும், அனுராதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் கிட்டத்தட்ட 40 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயரவில்லை என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இருப்பினும், குறித்த பகுதிகளில் மேலும் குறிப்பிடத்தக்க மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.