சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீரிணைப்பினை கைப்பற்றிய யேமன்
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மந்தெப் நீரிணைப்பை நோக்கியப் பகுதியில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகச் சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கப் படைகள் பாரிய இராணுவத் தாக்குதலை நடத்தி முக்கிய இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
பாப் எல்-மந்தெப் நீரிணைப்பை மேலோங்கிப் பார்க்கும் துபாப் மாவட்டத்தின் பெரும் பகுதிகளை யேமன் அரசாங்கப் படைகள் தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளின் பலமான வான்வழித் தாக்குதல் ஆதரவுடன் இந்தப் பகுதி முழுமையாகக் கைப்பற்றப்பட்டு வருவதாக இராணுவ மற்றும் அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தாக்குதல் நடவடிக்கை
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தீவிரத்தன்மையைத் தொடர்ந்து, யேமனில் பல வாரங்களாகத் தணிந்திருந்த உள்நாட்டுப் போர் மீண்டும் வெடித்துள்ளது.
சர்வதேச எரிபொருள் விநியோகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையான பாப் எல்-மந்தெப் நீரிணையைக் கைப்பற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் முயன்று வரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

"பயங்கரவாத ஆயுதமேந்திய குழுக்களின் பிடியிலிருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்" என யேமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தின் தலைவர் ரஷாத் அல்-அலிமி அறிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்கப் படைகளின் முன்னேற்றத்தை ஹூதி தரப்பு ஊடகங்கள் மறுத்துள்ளன. எனினும், செங்கடல் பகுதியில் தடையில்லா கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும், தமது எல்லைகள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும் சவூதி அரேபியா இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தீவிர வான்வழி ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.