எக்ஸ்-பிரஸ் பேர்ல் நிறுவன மறுப்பு : அரசாங்கம் வெளியிட்ட நிலைப்பாடு
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல் பேரழிவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறைவேற்ற மறுப்பது தொடர்பில், அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
சாத்தியமான தலையீடு குறித்து அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இழப்பீடு
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சாத்தியமான தலையீடு குறித்து இறுதி செய்தவுடன் அரசாங்கம் அறிவிப்பை வெளியிடும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை கூறினார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல் பேரழிவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறைவேற்ற மறுத்தது குறித்து இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகமும் எக்ஸ் பதிவில் கவலை தெரிவித்துள்ளது.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு
“எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள், வாழ்வாதாரங்கள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு பேரழிவு தரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு முக்கியமான படியாகும்” என்று ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
"மாசுபடுத்துபவர் பணம் செலுத்துகிறார்" என்ற கொள்கை, கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. மாநாடு போன்ற உலகளாவிய ஒப்பந்தங்களில் பொதிந்துள்ளது என்று எக்ஸில் ஒரு பதிவில் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
"பொறுப்பை உறுதிசெய்து, சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்து, எதிர்கால கடல் துயரங்களைத் தடுக்க, அனைத்து பங்குதாரர்களும் இந்தப் பொறுப்பை நிலைநிறுத்த செயல்பட வேண்டும்" என்று ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.



