காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 9 நாட்களுக்கு பின் உயிரிழப்பு
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று, கண்ணபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி கடந்த 9 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
59 வயதுடைய காத்திகேசு இராசலெட்சுமி என்பவரே இவ்வாறு கடந்த 05.11.2026ஆம் திகதி காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தார்.
இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று (13.11.2026) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துரத்திச் சென்ற யானை
குறித்த பெண் தனது கணவருடன் மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணைத் தாக்கிய யானை, அவரைப் பற்றைக்காட்டுக்குள் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளது.

யானையிடமிருந்து தப்பித்துக் கொண்ட கணவர், பின்னர் மனைவியைத் தேடிச் சென்றபோது பற்றைக்காட்டுக்குள் இருந்து அவரது சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து, கிராம மக்களின் உதவியுடன் அவர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.