கொழும்பில் அரசின் அதிரடி நடவடிக்கை! அகற்றப்படவுள்ள பல லட்சம் கட்டடங்கள்
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பல்வேறு சட்டவிரோத கட்டுமானங்கள் காணப்படுவதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, இந்தச் சட்டவிரோத கட்டுமானங்களை துரிதமாக அகற்றுவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு நகரின் நீர் வழிந்தோடும் வடிகாலமைப்பு கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. இதனை தாம் ஏற்றுக்கொள்வதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
அகற்றப்படவுள்ள கட்டடங்கள்
30, 40 வருடங்களாக சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பான பிரச்சினை நிலவி வருகின்றது.

கொழும்பு நகரில் மழைநீர் மட்டுமன்றி ஏனைய கழிவுகளை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இருந்த போதிலும், அவற்றில் பெரும்பாலானவை இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சில வெளிநாட்டு நிறுவனங்கள் இச்செயற்பாடுகளுக்காக வழங்கிய நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகள்
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் நாளாந்தம் வெளியேற்றப்படும் மொத்தக் கழிவுகளான 700 - 800 மெட்ரிக் தொன் அளவில், 6 முதல் 10 சதவீதமானவை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளாகும்.

புறநகர் நகர சபை அதிகாரப் பிரதேசங்களான தெஹிவளை-கல்கிஸ்ஸ, கோட்டை, கொலன்னாவ மற்றும் மொரட்டுவ ஆகிய நகர சபைகளாலும் நாளாந்தம் மேலும் 350 - 400 மெட்ரிக் தொன் திண்மக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது.
அவற்றிலும் கணிசமான அளவு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் அடங்கியுள்ளன.
நாட்டில் நாளாந்தம் சுமார் 938 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்ற போதிலும், அவற்றில் 3 முதல் 4 சதவீதம் போன்ற மிகச் சிறிய அளவே முறையாக மீள்சுழற்சி செய்யப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.