இலங்கையர்கள் வெளிநாடுகளின் பயங்கரவாதக் குழுக்களில் இணையச் செல்வதைத் தடுக்க புதிய சட்டம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று பயங்கரவாதக் குழுக்களில் இணைவதையும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்திற்கு நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகள் தடுப்புச் சட்டமூலம் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சட்டமூலம் தொடர்பாக விரிவாக ஆராய்வு
நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இச்சட்டமூலம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2178ஆம் இலக்கத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதே இச்சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி,
- பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
- பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிடுதல் மற்றும் தயார்படுத்துதல்.
- பயங்கரவாதப் பயிற்சி வழங்குதல் அல்லது பெற்றுக்கொள்ளுதல் போன்ற குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

இலங்கையில் சட்ட நடவடிக்கை
மேலும், இலங்கைப் பிரஜைகள் அல்லது வெளிநாட்டுப் பிரஜைகள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் குறிப்பிட்ட பயங்கரவாதக் குற்றங்களுக்காகவும் இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்க இந்த சட்டமூலம் வழிவகுக்கும்.
இந்தச் சட்டம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை அவர்களின் இன அடிப்படையில் இலக்குவைக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்த சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் இதனை நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காகச் சமர்ப்பித்திருந்தார்.
குழுவின் அனுமதி கிடைத்துள்ள போதிலும், நாடாளுமன்றத்தின் ஏனைய சட்டமியற்றும் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னரே இந்த சட்டமூலம் சட்டமாக அமையும்.