இலங்கையை நெருங்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என்பதால், எதிர்வரும் நாட்களில் இலங்கையில் கடுமையான வானிலை நிலைமைகள் ஏற்படக்கூடும் என ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவக் கூட்டமைப்பின் இலங்கைக்கான பிரிவு (A-PAD SL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (13) வெளியிடப்பட்ட வானிலை ஆலோசனையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது.
இது நவம்பர் 15ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, நவம்பர் 16ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடாவில் இது சூறாவளிப் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இலங்கையில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும். அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வானிலைப் பாதிப்பு
குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையின் கிழக்குக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்தால், நாட்டில் கடுமையான வானிலைப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என A-PAD SL எச்சரித்துள்ளது.
எனினும், குறித்த வானிலைத் தொகுதியின் நகர்வுப் பாதை மற்றும் அதன் தீவிரம் தொடர்பில் இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக மண் ஏற்கனவே அதிகளவு நீரை உறிஞ்சியுள்ளதால், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சுமார் 17 பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தை எட்டியிருந்ததுடன், நவம்பர் 12ஆம் திகதி முதல் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருந்தன.
குறுகிய நேரத்திற்குள் அதிகளவு மழை பெய்யும் பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தாழ்வான நகர்ப்புறப் பகுதிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களை அண்மித்த பகுதிகள், நீர்த்தேக்கங்களின் வான்பாயும் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், இடியுடன் கூடிய மழையுடன் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இதற்கிடையில், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
வடிகால் மற்றும் நீர் செல்லும் பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும்.
வாகனங்கள் மற்றும் பெறுமதியான உபகரணங்களை பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
வெள்ளநீர் தேங்கியுள்ள வீதிகளில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வழங்கப்படும் வெளியேற்ற உத்தரவுகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும்.
உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என A-PAD SL வலியுறுத்தியுள்ளது.