மலையக மக்களை மறந்துவிட்டாரா ஜனாதிபதி! வரவு - செலவுத் திட்டத்தை விளாசிய மனோ கணேசன்
பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஜனாதிபதி கண்டுகொள்ளவில்லை எனவும், ஒட்டுமொத்தத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் வெறும் வெற்றுவேட்டு மாத்திரமே எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட உரை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மலையக மக்களின் வாழ்வாதாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து நீண்ட உரையாற்றினார். ஜனாதிபதி வெறும் கணக்குப்பிள்ளை போல் இருக்கக் கூடாது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் நான் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தேன்.

ஆனால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மலையக மக்களின் அத்தியாவசியத் தேவைகள் எவற்றையும் ஜனாதிபதி கருத்தில்கொள்ளவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளமான 200 ரூபா கொடுப்பனவைத் தொடர்ச்சியாக வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆனால், இன்று பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைச் செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி அறியவில்லையா? மலையக வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்ட போதிலும், 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் இதுவரையில் வெறும் 50 வீடுகள் அளவு மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இந்த வரவு - செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.