அநுரவை தமிழர்களின் மன்னான மாற்றிய சிங்கள இனவாதி! மக்கள் மத்தியில் இனவாதத்தை கடத்தும் வீரவன்ச
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கை சிங்கள மக்களுக்கு எதிரான எல்லாள மன்னனின் மறுபிறவி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அநுர உருவத்தில் மீண்டும் பிறந்து வந்திருப்பது ஒரு வடுக மன்னனே(வேற்று தேசத்தில் இருந்து வந்து இலங்கையை ஆக்கிரமித்த மன்னர்கள்) ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று(13.11.2026) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அநுராதபுரம் என்பது புனித பௌத்த பூமியாகும். தேரவாத பௌத்தத்தின் மையம் மற்றும் உலகளாவிய பௌத்த மையமாக உள்ளது. அத்தகைய புனித பூமி, இந்த நாட்டில் வாழும் மக்களின் இதயம் மட்டுமல்ல.
பௌத்தர்களுக்கு எதிரானவரா அநுர
உலகம் முழுவதும் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றும் அனைத்து பௌத்தர்களினதும் இதயமாகும். அந்த இதயத்தின் மீது அநுர குமாரவின் வன்முறைப் படையினருக்கு கை வைக்க நாம் இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளித்துக் கொண்டு நாம் பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டோம்.
அநுராதபுரத்தில் அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐந்து பௌத்த பிக்குகள் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான பௌத்த பொதுமக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

பின்னர், அது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றப்பட்டது. அந்தப் போராட்டம் மிகவும் அமைதியான முறையிலேயே இடம்பெற்றது. எவ்வித வன்முறையும் அங்கு இடம்பெறவில்லை. தாம் கூறவிளைந்த கருத்துக்களை அமைதியான முறையிலேயே அந்த பௌத்த தேரர்கள் முன்வைத்து வந்தனர்.
ஆனால், அநுர குமார தலைமையிலான இந்த சர்வாதிகாக ஆக்கிரமிப்பாளர்கள் அந்த அமைதியான போராட்டத்திற்கு எவ்வாறு பதிலளித்தனர்? இந்தப் போராட்டத்திற்கு எதிராக முதலில் நீதிமன்ற உத்தரவினை இந்த அரசாங்கம் பெற்றது.
பின்னர், போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு பெலவத்த பாதாள உலகக் குழுவினரைக் கொண்டு வந்து அமைதியான போராட்டத்தில் நேற்று குழப்பதை ஏற்படுத்தியிருந்தனர். இவர்ளோடு சேர்ந்து அரசாங்கத்தின் ஆதரவான ராஜாங்கணையை சத்தாரதரன தேரரும் இந்த அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
ராஜாங்கணைய தேரர் என்பவர், பௌத்த நிகாயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர். காவியுடை அணிவதற்கான எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையும் அவருக்கு இல்லை. இந்தநிலையில், அநுர அரசாங்கத்துடனும், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அரசாங்கத்துடனும்(இந்தியா) கொண்டுள்ள நெருக்கத்தின் காரணமாக, தொடர்ந்து காவியுடை அணிந்து அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

போராட்டக் களத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் காதுகளில் பெரிய ஆபரணங்கள் அணிந்து கொண்டு, முகம் முழுவதும் தாடியுடன் காணப்பட்ட இவர்கள்தான், காலி முகத்திடல் போராட்டக் களத்தில் வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டவர்களாவர்.
இவ்வாறானவர்களைக் கொண்ட பெலவத்த பாதாளக் குழுவினர்தான் இறுதியில் அந்த காவியுடைதாரியுடன் வந்து, அமைதியாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ச்சியான தாக்குதலை நடத்தினர்.
இதனை அங்கிருந்த பொலிஸ் அதிகாரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அரசாங்கமும், இந்த ஜனாதிபதியும் தாம் விரும்பும் எந்தவொரு தேவைக்கும் இந்த நாட்டின் பொலிஸ் திணைக்களத்தைப் பயன்படுத்துகின்றனர். அநுராதபுரத்தில் உள்ள பொலிஸார், ஜேவிபியின் வன்முறைக் கும்பலுடன் இணைந்து அந்த புனித பூமியை அவமதித்து, மிகவும் மிருகத்தனமான நடத்தையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நாட்டின் பௌத்தர்களுக்கும் பௌத்த மதத்திற்கும் அநுர குமாரவின் வன்முறைய ஆட்சியில் என்ன இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளின் கருத்துக்களோடு, தாம் ஒத்துப் போகவில்லை என்பதற்காக, தமது அரசாங்கத்திற்கு அது விருப்பமில்லை என்பதற்காக, தமது குண்டர்களைக் கொண்டு வந்து தாக்கி இரத்தம் சிந்தச் செய்வதற்கு எந்தவொரு உரிமையும் கிடையாது.

அநுர குமார என்பவர் மீண்டும் பிறந்து வந்திருக்கும் ஒரு வடுக மன்னனே ஆகும். அது எல்லாளனின் தற்போதைய மறுபிறவி போன்றதாகும். இந்தப் போராட்டத்தை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு, இந்த நாட்டின் மகா சங்கத்தினரும் மதிப்பிற்குரிய மகாநாயக்க தேரர்களும் முன்னோடிகளாக இருக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
மிருகத்தனமான பெலவத்தை பாதாளக் குழுவை மேலும் தொடர்ந்து செயற்பட அனுமதிக்காமல் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு, இந்த நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பாகும்.
அநுர குமாரவின் இந்தக் கொடூரமான ஆட்சியை மேலும் தொடர அனுமதிக்காமல், பௌத்த மக்களிடையே ஏற்படும் உணர்வுகளையும் பிக்குகள் மற்றும் பெர்துமக்கள் பௌத்தர்களின் எதிர்ப்பையும் ஒழுங்கற்ற முறையில் வெளிப்படுத்துவதற்கு இடமளிக்காமல், மகாநாயக்க தேரர்கள் தமது பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தேரர்களின் அமைதியான இந்த எதிர்ப்பை அநுர தரப்பு எதிர்கொள்ளும் விதம், தென்னிந்தியாவில் இருந்து வந்த ஆட்சியாளர்கள் கூட எதிர்கொள்ளாத அளவிற்கு மிகவும் கொடூரமானதாகவும் வன்முறையானதாகவும் உள்ளது. இவர்கள் அநுராதபுரத்தில் பௌத்தர்களைத் தாக்குவதுடன், புத்தர் சிலைகளையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இவர்கள் கொண்டுள்ள மிகப்பெரிய தவறான எண்ணம் என்னவென்றால், பௌத்தரக்ளைத் தாக்குவதன் மூலம் ஏனைய மதத்தவர்கள் மகிழ்ச்சியடைநது அநுர குமாரவின் ஆட்சியுடன் மேலும் நெருக்கமாகிவிடுவார்கள் என்று நினைப்பதாகும். ஆனால், ஏனைய மதத்தவர்களும் இதனைப் பார்த்து, பிரதான மதத்தினருக்கு எதிராக இவ்வாறு நடந்து கொள்பவர்கள் எமக்கு எதிராக எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று புரிந்து கொள்வார்கள் என நான் நினைக்கின்றேன்.
இந்தப் பெலவத்த குழுவினர் மதம் என்ற விடையத்தையே நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். பெலவத்த தலைமையகத்திற்குச் சென்று பாருங்கள். அங்கு புத்தர் சிலையோ, இயேசு கிறிஸ்துவின் சிலையோ அல்லது வேறு எந்த மதச் சின்னமோ இருக்கின்றதா என்று பாருங்கள். இவர்களின் தலைமையகத்தில் எந்தவொரு மத அடையாளமும் கிடையாது. இவர்கள் மிருகத்தனமான ஒரு பாதாள குழுவாகும்.
அதனால், புத்தரின் காவியுடையைத் தாக்குவது இவர்களுக்கு ஒரு சாதாரண விடயமாக இருக்கின்றது. இந்தக் குழுவினரை மேலும் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதித்தால், இந்த நாட்டில் புத்தரின் சீடர்களுக்கு வாழ்வதற்கான உரிமையே இல்லாத நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.