உலகளவில் மைக்ரோசொப்ட் சேவை முடக்கம்: நிறுவனங்கள் - பாடசாலைகள் - அரச அலுவலகங்கள் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பாரிய மைக்ரோசொப்ட் சேவைத் தடங்கல் காரணமாக Outlook, Microsoft Teams, SharePoint, Microsoft 365 மற்றும் Copilot உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களின் அன்றாடச் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
பாதிப்பு
அவுஸ்திரேலியாவில் சில பாடசாலைகளால் இணையவழிக் கற்பித்தலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், நிறுவனங்களின் விலைப்பட்டியல் அச்சிடுதல் மற்றும் நீதிமன்றங்களின் நேரடி ஒளிபரப்புகளும் பாதிக்கப்பட்டன.
சிலர் இணையவழி வேலை நேர்முகத் தேர்வுகளிலும் பங்கேற்க முடியாமல் போயுள்ளனர்.
அமெரிக்காவில் Outlook சேவை முடங்கியதால் பல அலுவலகப் பணியாளர்கள் மாற்று தொடர்பாடல் வழிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

Down detector தளத்தில் Outlook தொடர்பான சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சேவைகள் முழுமையாக வழமைக்குத் திரும்புவதில் தாமதம்
சேவைகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசொப்ட் அறிவித்துள்ள போதிலும், மீளச் செயற்படுத்தப்பட்ட சேவையகங்கள் மீண்டும் செயலிழப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சேவைகள் முழுமையாக வழமைக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.