சீன திட்டங்களை தமிழ் தேசிய கட்சிகள் ஏன் எதிர்க்க வேண்டும்..!
ரஷ்ய - சீனக் கூட்டை மையப்படுத்திய பிறிக்ஸ் நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ஒன்று தசம் பதினான்கு மில்லியன் அமெரிக்க டொலர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சென்ற ஆகஸ்ட் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளடங்கலாக பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை மையப்படுத்தியே அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய வர்த்தக முறைகளும் இந்தியாவின் பங்களிப்பும் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் பிரதானமானது எனவும் சீன, இந்திய வர்த்தகச் செயற்பாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் அதிகரித்த நிலையில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன.
வர்த்தகச் செயற்பாடுகள்
இதன் காரணமாக பிறிக்ஸ் நாடுகள் உலகளவில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாக சின் ஹவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பங்களிப்பு பற்றியும் இந்தச் செய்தி நிறுவனம் விபரிக்கிறது.
ஆகவே சீன - இந்திய வர்த்தக உறவுக்குப் பிரச்சினை இல்லை என்பது தெளிவாகிறது. இந்திய அரச செய்தி நிறுவனங்களும் சீன இந்திய வர்த்தகச் செயற்பாடுகளைப் பாராட்டியிருக்கின்றன.
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் சீனாவுக்குப் போட்டியில்லை. பிராந்தியத்துக்குச் சம்பந்தப்படாத அமெரிக்கா மாத்திரமே இப்போது சீனாவின் நேரடிப் போட்டியாளர் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான குளோபல் ரைம்ஸ் (global times) புவிசார் அரசியல் பொருளாதார விமர்சனங்கள் ஒவ்வொன்றிலும் கருத்துக்களை முன்வைத்து வருகிறது.
இந்தியாவுடன் சீனாவுக்கு இருப்பது எல்லைப் பிரச்சினை மாத்திரமே என்றும் குளோபல்ரைமஸ் வர்ணிக்கிறது.
அதேநேரம் இந்தியாவில் நூற்று ஐம்பது சீன நிறுவனங்கள் இயங்குகின்றன, அவை இந்தியாவில் செய்துள்ள முதலீடு மட்டும் எட்டு பில்லியன் டொலராகும். இதனால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இந்திய மக்களுக்குக் கிடைத்துள்ளதாக டில்லியில் உள்ள சீனத் தூதரகம் தெரிவிக்கிறது.
சீனாவிற்கு இந்தியா செய்யும் ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் இருபது சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம் சுமார் நாற்பத்து ஐயாயிரம். அதில் இருபதாயிரம் மாணவர்கள். சீன பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா ஏழாவது இடம் வகிக்கிறது.
சீனாவில் இருந்து, அதிகப்படியான உரம், இரசாயனம், எதிர்ப்பு சக்தி மருந்துகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. அத்துடன் ஏழு இந்திய வங்கிகள் சீனாவில் கிளைகளைத் திறந்துள்ளன.
சீனாவின் கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி வங்கி (Industrial and Commercial Bank of China - ICBC) வங்கி மட்டும் மும்பையில் ஒரு வங்கிக் கிளையைத் திறந்துள்ளது.
இந்திய சீன வர்த்தகத்தை மேம்படுத்த, சீனாவில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு 2017இல் இருந்து இலத்திரனியல் அடையாள அட்டை (Electronic Business Cards) முறையை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சீன வர்த்தகம் 2000 ஆம் ஆண்டில் இருந்து மூன்று பில்லியன் டொலராக அதிகரித்து 2008 இல் 52 பில்லியன் டொலர்களாகவும் 2011 இல் 73.9 பில்லியன் டொலர்களாகவும் 2018 இல் இருந்து 90 பில்லியன் டொலர்களாவும் உயர்வடைந்துள்ளது.
ஒப்பந்தங்கள்
தற்போது இதன் எண்ணிக்கை இரண்டு மடங்குகளாக அதிகரித்துள்ளதாக டில்லியில் உள்ள சீன தூதரக இணையத்தின் வர்த்தக உறவுகள் தொடர்பான பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளது.
2014 இல் ஷி ஜிங்பிங் இந்தியா வந்த போது, ரயில்வே, விண்வெளி, மருந்து, தொழில்நுட்ப பூங்கா போன்றவற்றை மேம்படுத்த பதினாறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
2015 இல் நரேந்திர் மோடி சீனா சென்ற போது, இரு நாடுகளுக்கு இடையே இருபத்து நான்கு ஒப்பந்தங்களும், இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையே இருபத்து ஆறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
2016இல் அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சீனா சென்ற போது உயர்கல்வி தொடர்பாக பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
2018 இல் சீனாவின் யூஹானில் பிரதமர் மோடி, ஷி ஜிங்பிங்கை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாகவே தமிழகம் மாமல்லபுரம் சந்திப்பை அவதானிக்க முடியும். இதன் தொடர்ச்சியாக 2023 இல் பிறிக்ஸ் மாநாட்டோடு வர்த்தக உறவு மேலும் விரிவடைந்துள்ளது.
ஆகவே சீனாவுடன் நல்லுறவுகளைப் பேணிக் கொண்டு இலங்கை, மியன்மார், மாலைதீவு போன்ற நாடுகளில் சீனா மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா ஏன் ஓரக் கண்ணால் பார்க்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. சீனா இலங்கைக்கு வழங்கும் உதிவிகளை இந்தியாவினால் தடுக்கவும் முடியவில்லை.
இலங்கையும் இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் சீனாவிடம் இருந்து தேவையான உதவிகளை பெறுகிறது. இலங்கைத்தீவில் சீனாவுக்குத் தேவையான நிலங்களையும் குத்தகைக்கு வழங்கி வருகிறது.
சீன உதவிகள் என்பது இலங்கையின் உள்ளக விவகாரம் என்று இந்திய இராஜதந்திரிகள் அவ்வப்போது பட்டும் படாமலும் கூறியும் இருந்தனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு என்று இப்போதும் அப்படித்தான் கூறி வருகின்றனர்.
இரண்டாயிருத்து முந்நூற்று முப்பது ஹெக்ரேயர் கடல் பரப்பை மூடி 2014 இல் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு போட் சிற்றித் திட்டம் கூட இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை என்று இந்தியா அப்போது கூறியிருந்தது.
சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதையோ இலங்கையில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியோ இந்தியா கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் ரட்ண சிறி விக்கிரமரட்ன 2010 இல் நாடாளுமன்றத்தில் தெளிவாக எச்சரித்தும் இருந்தார்.
இலங்கையில் சீனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிடுவதைவிட இந்தியத் திட்டங்களுக்கு மாத்திரமே சிங்கள அமைப்புகளும் பௌத்த குருமாரும் கடும் எதிர்ப்பு வெளியிடுகின்றன. சிங்கள அரசியல் தலைவர்களும் சீனாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இருந்தாலும் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வருவதையிட்டு இந்தியா சில வருடங்களாக அதுவும் கடந்த சில மாதங்களாக அதிகளவு கவலையடைந்துள்ளமை பகிரங்கமாகி வருகின்றது.
அபிவிருத்தித் திட்டங்கள்
குறிப்பாக வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியே இந்தியா அதிகளவு கவலை கொண்டுள்ளது போல் தெரிகிறது.
ஆனால் சீன - இந்திய வர்த்தகம் உலகில் முன்னணியாக இருக்கும் நிலையில் இலங்கைத்தீவில் அதுவும் வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை மாத்திரம் இந்தியா விரும்பாமல் இருப்பதன் பின்னணி என்ன? எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டாமல் மறைமுகமாக அல்லது வேறு அழுத்தங்கள் மூலம் இந்தியா தனது விருப்பம் இன்மையை உணர்த்தி வருகிறது.
கடந்த 2009 மே மாதத்திற்கும் பின்னரான சூழலில் கடந்த பதினான்கு வருடங்கள் சென்றுவிட்ட நிலையிலும்கூட ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்துக்கு நிரந்தத் தீர்வு ஏற்படாத ஒரு நிலையில், குறைந்தபட்சம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத ஒரு சூழலில் சீன அபிவிருத்திகளை இந்தியா விரும்ப மறுப்பதன் அடிப்படைக் காரண காரியங்கள் என்ன? கொழும்பு போட் சிற்றி தொடர்பான பேச்சுக்கள் 2011 இல் ஆரம்பித்து 2014 இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோதுகூட இந்தியத் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தல் இல்லை என்று மார்தட்டிய இந்தியா, தற்போது இந்தியத் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தல் என்ற தொனியில் பேச ஆரம்பித்துள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய நிலையான தீர்வை ஏற்படுத்தினால் மாத்திரமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் 2009 இற்குப் பின்னரான சூழலில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. சம்பந்தன் நாடாளுமன்ற உரையில் பகிரங்கமாக விபரித்துமிருக்கிறார்.
ஆனால் அது பற்றி இந்தியா கவனத்தில் எடுக்கவில்லை. போரில் தோல்வி கண்ட தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்கள் முக்கியமானதல்ல என்ற பார்வையில் செயற்பட்டு சிங்கள ஆட்சியாளர்களை மாத்திரம் நம்பிச் செயற்பட்ட இந்தியா, தற்போது வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை ஏன் பின்கதவால் எதிர்க்க வேண்டும்? வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரியக் காணிகளை துண்டு துண்டாக்கி நிலத் தொடர்பற்ற தமிழ்சமூக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் 1949 இல் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா திட்டத்தின் நோக்கங்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
வடக்குக் கிழக்கு "தமிழர் தாயகம்" என்ற கோட்பாட்டை உடைக்கவே அபிருத்தி என்ற போர்வையில் சீனாவுக்கு நிலங்கள் கையளிக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு இலங்கை கையளித்துள்ள நிலங்கள், இயற்கைத் துறைமுகங்கள்கூட அதன் அடிப்படைதான்.
ஆகவே தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் துண்டாடப்படும் என்ற நோக்கில் சீன அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா விரும்பவில்லையா? அல்லது தமிழர் பிரதேசங்களில் இந்தியாவின் புவிசார் அரசியல் பொருளாதார நோக்கங்களுக்கு அது ஆபத்து என்ற நோக்கிலா? 2009 இற்குப் பின்னரான சூழலில் இருந்து இன்றுவரையும் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் திட்டங்களை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை? கண்டிக்கவில்லை? ஆகவே எந்த எதிரி நாடென்றாலும் தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முன் வந்தால் நல்லது என்ற "ஒற்றைச் சிந்தனை" மாத்திரம் தற்போது தமிழ் மக்களிடம் உருவாக்கக் கூடிய பரிதாபகரமான நிலைமை உண்டு.
ஏனெனில் 2009 இல் போருக்கு ஒத்துழைத்த அமெரிக்க இந்திய அரசுகளும் சீனாவும் சிங்கள தலைவர்களுடன் மாத்திரம் பேச்சு நடத்தும் நிலையில் கொழும்பின் அனுமதி ஊடக வரும் அபிவிருத்தித் திட்டங்களை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என எந்த வல்லரசு நாடுகளும் எதிர்பார்க்கவே முடியாது.
தமிழ் ஈழம் அமைந்தால் அதனை முதலில் எதிர்ப்பது சீனாதான் என்று 1979 இல் கொழும்பில் இருந்த சீனத் தூதுவர், பேராசிரியர் வில்சனிடம் அப்போது கூறியிருந்தார். இது பற்றிய காரண காரியங்களை அரசியல் - இராணுவ ஆய்வாளர் டி சிவராம் 2003 இல் வீரகேசரி ஞாயிறு வார இதழில் விபரித்திருந்தார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை இந்தியா ஆதரித்திரிக்கும். ஆனால் "ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை" என்பதை அங்கீகரிக்க முடியாதென அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1983 இல் தன்னிடம் கூறியதாக கவிஞர் புலமைப் பித்தன் 2008 இல் வழங்கிய நேர்கணால் ஒன்றில் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆகவே 1979 இல் தமிழ் ஈழம் என்பதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த சீனா 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் தனக்குரிய புவிசார் அரசியல் தேவைகளை நிறைவேற்றுகிறது என்பது பகிரங்கம்.
எனவே ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வுகளை அமெரிக்க - இந்திய அரசுகள் புரிந்துகொள்ளும் வரை தமிழ்த் தேசியக் கட்சிகள் சீன அபிவிருத்த்தித் திட்டங்களை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் சுயமரியாதையோடு நின்று பிடிக்கக்கூடிய அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும்.