தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைக் கூற பேராயர் கர்தினாலுக்குத் தயக்கம் ஏன்! நாடாளுமன்றத்தில் சிறீதரன் கேள்வி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக நீதி கோரி இன்று வரை குரல் கொடுக்கும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும், கத்தோலிக்க சபையினரும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர் என்று கூறுவதற்குத் தயக்கம் காட்டுவது ஏன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(11) நடைபெற்ற ''வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்'' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நான்கு கடற்றொழிலாளர்கள்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
"கடந்த மே 27ஆம் திகதி பருத்தித்துறைமுனைப் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற தந்தை, மகன் உட்பட நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல்போயுள்ளனர்.
அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை அரசு உரிய நேரத்தில் முன்னெடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்சமூகம் குற்றம் சாட்டுகின்றது.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசிடமிருந்து இதுவரை முறையான பதில் இல்லை. எனவே, அவர்களின் குடும்பத்தினருக்குப் பதில் அளிக்கும் வகையில் உண்மை என்ன என்பது கண்டறியப்பட வேண்டும்.
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கடந்த மே 18 அன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்றும், அதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அவர் கூறிய இந்தக் கருத்துக்குச் சில கிறிஸ்தவ அமைப்புகளே கண்டனம் தெரிவித்திருந்தன. மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழ் மக்களுக்கு நடந்தது இனவழிப்பு என்பதை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
ஆனால், தற்போதைய கத்தோலிக்க சபை அதற்கான நீதியைக் கோருவதற்குத் தயாராக இல்லை.
சிறீதரன் கேள்வி
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் முன்வைத்த கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். யாழ். மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மயிலிட்டி மக்கள், 35 வருடங்கள் கடந்தும் இன்னும் தங்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமது நிலங்களை விடுவிக்கக் கோரி அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மயிலிட்டியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவத்தினர் குடியேறவும் இல்லை; ஆனால் அங்கு விவசாயத் தோட்டம் செய்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் சலூன்கள், முன்பள்ளிகள் மற்றும் விவசாயத் தோட்டங்களை நடத்தி, காய்கறிகளைச் சந்தையில் விற்கின்றனரே தவிர, மக்களின் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிரிகேடியர் பால்ராஜ் குறித்துப் பேசினார் என்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், சொந்த மண்ணில் குடியேற முடியாமல் 35 வருடங்களுக்கும் மேலாக மக்கள் உறவினர் வீடுகளில் வாழும் அவல நிலை குறித்து எவரும் பேசுவதில்லை.
எனவே, மாறி மாறி வரும் அரசுகள் பொய்களைக் கூறாமல், மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam