நீதியரசர்களின் ஓய்வு வயதை கூட்டுவது நீதித்துறைச் சுதந்திரத்தில் தலையிடும் செயல் - சுமந்திரன் காட்டம்
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் நடவடிக்கையை ஆட்சேபித்து கொழும்பில் நேற்று(27.07.2026) மூத்த சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது மிக மிக மோசமான விடயம். இந்த அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாக கொடுத்திருந்த வாக்குறுதி ஒரு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவோம் என்பதாகும். அதைக் கூறி, ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றன.

இந்த இடைப்பட்ட காலத்தில் இதற்கான சம்பாசணை ஆரம்பிக்குமாக இருந்தால் அதிலே நீதியரசர்களின ஓய்வு பெறும் வயது எல்லை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும், அது எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பாகவும் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கும். ஆனால் நடைபெறவில்லை.
அவசரமாக அரசமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வரவேண்டுமாக இருந்தால் கடந்த அரசில் அவர்கள் (ஜே.வி.பியினர்) கொண்டு வந்த தனி நபர் பிரேரணையாகத்தான் இருக்க வேண்டும்.
அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதான ஒரு தனி நபர் பிரேரணையாக இருக்க வேண்டும். அதை விட வேறு விடயமாக இருக்க முடியாது.
ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடு! அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க எச்சரிக்கை
அரசின் வீழ்ச்சி
தாங்களே முன்னர் கொண்டு வந்த ஒரு திருத்தத்தை இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் எந்த வாக்குறுதியிலும், எந்த விஞ்ஞாபனத்திலும் இல்லாத ஒரு விடயத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நிச்சயமாக நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம்.
அரசு இவ்வாறு செய்கின்றபோது ஏன் இவ்வளவு காலம் பொறுத்திருந்தார்கள் என்ற ஒரு கேள்வி எழுகின்றது. சில நீதியரசர்கள் இளைப்பாறுகின்றார்கள், சிலர் இளைப்பாற இருக்கின்றார்கள். சிலரை இளைப்பாற விட்டு, மற்றும் சில இளைப்பாற இருப்பவர்கள் இளைப்பாற முன்பு, குறித்த நேரத்தில் இதைக் கொண்டு வருவது ஏன் என்பதும் எல்லோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரியும்.

முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைப்பதுபோல மக்களுடைய வாழ்க்கை வயது கூடிவிட்டது ஆகையினால் நாம் இதனை நீடிக்கின்றோம் எனக் கூறுவது அனைவரையும் முட்டாளாக்கும் ஒரு செயற்பாடு.
இப்படித்தான் வீழ்ச்சி அடைகின்ற அரசுகளின் முதல் சறுக்கல் தொடங்குவது. ஆகையினால் நாங்கள் இந்த அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும் கொடுக்கின்றோம்.
சட்டத் திருத்தம்
அத்தோடு எதிர்க்கட்சியில் இருக்கின்ற யாராவது ஓர் உறுப்பினர் சென்ற நாடாளுமன்றத்திலே அவர்கள் (விஜித ஹேரத்) கொண்டு வந்த தனிநபர் பிரேரணையை இப்போது கொண்டு வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கின்ற அதே சட்ட திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். அத்தோடு நீதி அமைச்சருக்கும் ஒரு கோரிக்கை. இந்தச் சட்டத் திருத்தம் திருத்தப்படுமாக இருந்தால் நீங்கள் பதவி விலக வேண்டும்.

ஏனென்றால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் நீங்கள் ஆயுள்கால உறுப்பினர். அச்சங்கம் இதனை ஒட்டுமொத்ததாக எதிர்க்கின்றது.
அது மட்டுமல்ல, ஆரம்ப நிலை நீதிபதிகள், இடைநிலை நீதிபநிகள் மட்டுமல்ல, சட்டத்துறையில் இருக்கும் அனைவரும் எதிர்க்கும் வேளையில் சட்டத்தரணியான நீங்கள் இந்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. அது கொண்டு வரப்படுமானால் நீங்கள் பதவி விலக வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan