பாலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம்: யார் வெற்றிபெற்றனர்..!
“ஒரு செயல் தரவல்ல விளைவுகளில் இருந்துதான் அச்செயல் பற்றி எடை போடப்பட வேண்டும்” மத்திய கிழக்கில் இன்று ஏற்பட்டிருக்கின்ற யுத்தம் மத்திய கிழக்கின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கவல்லது.
அமைதியும் சமாதானமுமே அபிவிருத்திக்கான வழி. ஒரு யுத்த பிரதேசத்தில் அபிவிருத்தியோ அறிவியல் வளர்ச்சியோ ஏற்பட வாய்ப்பு இருக்காது.
அந்த அடிப்படையில் மத்திய கிழக்கை தொடர்ந்து யுத்த பதட்ட நிலையில் வைத்திருப்பதுதான் மேற்குலகத்தின் மூலோபாயமாக அல்லது தந்திரமாக உள்ளது.
யுத்த சூழல் தொடர்ந்தால் மத்திய கிழக்கு கி.பி ஆறாம் நூற்றாண்டின் நிலையிலேயே தொடர்ந்து தேங்கி நிற்கும். இந்த அடிப்படையில் தான் மத்திய கிழக்கை கட்டுப்படுத்துவதற்காக செறுக்கப்பட்ட ஒரு ஆப்பாகவே யூததேசம் உருவாக்கப்பட்டது.
காசாவின் சனத்தொகை
யூததேசம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை தேசத்தின் நிலப்பரப்பு எல்லைகள் காலத்துக்கு காலம் நடந்த ஒவ்வொரு பாலஸ்தீன - இஸ்ரேல் யுத்தங்களின் போதும் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டடு இஸ்ரேல் நாட்டுடன் இணைக்கப்பட்டு யூதகுடியிருப்புகளாகவும் மாறிப் போய்விட்டது.
இவ்வாறு தொடர் வளர்ச்சிக்கு உற்பட்டுவரும் யூததேசத்தை தொடர்ந்து பாதுகாக்கவே மேற்குலகம் எப்போதும் விரும்பும். அதற்காக என்ன விலையைக் கொடுக்கவும் மேற்குலகம் தயாராகவும் உள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் பலஸ்தீனத்தின் நிலப்பரப்பிலிருந்து ஹமாஸ் இயக்கம் எல்லை தாண்டி மேற்கொண்ட தாக்குதல்களுக்கு இஸ்ரேல் கொடுத்த பதில்தாக்குதல் என்பது மிகவும் கொடூரமானதும், ஆக்ரோஷமானதும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுமாக காணப்படுகின்ற போதிலும் அதை உலகின் கண்முன் பெரிய அளவில் மேற்குலக ஊடகங்களினால் வெளிக்காட்டப்படவில்லை.
வேண்டுமென்றே தவிர்த்தும் உள்ளனர். 2023 அக்டோபர் 07இல் ஹமாஸ் இயக்கம் யுத்தத்தை ஆரம்பித்தபோது காசா நிலப்பரப்பில் இருந்த மக்களின் தொகை 23 லட்சம்.
யுத்தத்தின் பின் காசாவில் தற்போது குடியிருக்கின்ற மக்களின் தொகை வெறும் 8 இலட்சம் மட்டுமே. மிகுதி 15 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்கிறார்கள்.
கொடூரமான உண்மை
இந்த யுத்தத்தில் இஸ்ரேல் தரப்பில் 1500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பலஸ்தீனியர்கள் தரப்பில் 15,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒரு யூதனுக்கு பதிலாக 10 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 100 பலஸ்தீனியர்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற ஒரு கொடூரமான உண்மை வெளிபடுகிறது.
அதேநேரத்தில், காசாவில் கட்டப்பட்டிருந்த கட்டுமானங்களும் கட்டிடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த இடிக்கப்பட்ட கட்டடங்களையும் அழிபாடுகளையும் அகற்றுவதற்கு குறைந்தது ஒரு ஐந்து வருடங்கள் தேவைப்படும்.
அதை மீளக்கட்டுவதற்கு இன்னும் 10 வருடங்கள் தேவை ஆகவே ஒரு 15 வருடங்கள் காசாவை மீள்கட்டுமானம் செய்வதற்கு தேவையாக உள்ளது.
இது பலஸ்தீனர்களுக்கு கிடைத்த பெரும் தோல்வி. இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கு இன்னும் 15 வருடங்கள் அவர்களுக்கு தேவைனெ்பதே யதார்த்தம்.
மேற்குலக சதி
இந்தத் தோல்விக்கு பலஸ்தீனியர்கள் மட்டும் பொறுப்பல்ல அவர்களுக்கு பின்புலமாக இருக்கின்ற மத்திய கிழக்கு நாடுகளும், ஈரானியர்களுக்கும் இது பெரும் தோல்வியாகவே கருதப்பட வேண்டும்.
எனவேதான் ஈரானின் ஆதரவு இஸ்லாமிய இயக்கங்கள் மேற்குலகத்தின் மீது இரண்டாம் கட்ட களம் ஒன்றை செங்கடலிலும் ஏடன் வளைகுடாவிலும் தொடங்கினார்கள்.
அது ஏமன் நாட்டுக்கும் அங்கு இருக்கின்ற ஹவுதி இயக்கத்திற்கும் இன்னொரு பின்னடைவை கொடுத்திருக்கிறது.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். மேற்குலக ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற சிறு தாக்குதல்களுக்கும் ஏமன்நாட்டின் நிலப்பரப்பில் உள்ள காட்டமானங்கள் மீது ஹவுதி இயக்கத்தின் தளங்கள் என்று கூறி அமெரிக்க கடற்படை மேற்கொள்கின்ற பதிலடித் தாக்குதல்கள் மிகக் கொடூரமானதாகவும் பயத்தை ஊட்டுவதாகவும் நீண்ட பின் விளைவுகளையும் பேரழிவை ஏற்படுத்த வல்லதாகவும் அமைவதை கவனிக்க வேண்டும்.
இஸ்லாமியர்களோ அல்லது இஸ்லாமிய உலகமோ ஒரு முன்னேற்றகரமான பாதையை நோக்கி விஞ்ஞான ரீதியில் வளர்ந்து செல்வதற்கு மேற்குலகம் எப்போதும் தடையாகவே இருக்கும். தடுக்கவே முற்படும்.
குறிப்பாக ஈரானுடைய அணு ஆராய்ச்சி ஒரு கட்டத்தை நெருங்கிய போது ஈரானின் தலைமை அணு விஞ்ஞானி பாட்றி ஷாட் (Mohsen Fakhrizadeh) 2020 நவம்பர் 27ஆம் திகதி ஈரானில் காரில் சென்றுக்கொண்டிருந்து போது நடத்தப்பட்ட திட்டமிட்ட துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.
உயர் தொழில்நுட்பத் தாக்குதல்
Mohsen Fakhrizadeh-ஐ இஸ்ரேலியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்ததாக லண்டனை தளமாக கொண்ட யூத வார இதழான The Jewish Chronicle தெரிவித்துள்ளது.
அத்தோடு இத்தாக்குதல் ரோபோக்களை பயன்படுத்தி சாட்டிலைட் தொழில்நுட்பத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்தே தாக்குதலை வழி நடத்தியதாகவும் பற்ரிசாட்டும் அவருடைய மனைவி மற்றும் பாதுகாவலர்களும் கொல்லப்பட்ட பின்னர் தாக்குதல் நடத்திய ரோபோக்களும் வெடித்து சிதறி தடயங்கள் இன்றி அழிக்கப்பட்டன.
இத்தகைய உயர்ந்த தொழில்நுட்பத்தை இஸ்ரேலின் மொசாட்டைத் தவிர வேறு யாராலும் ஈரானுக்குள் செய்ய முடியாது என சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்தனர்.
அவ்வாறே ஈரானின் அறிவிக்கப்படாத ராணுவ தளபதியாக செயற்பட்ட காசிம் சுலைமானி 03-01-2020 அன்று இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்ற போது அமெரிக்க ராணுவப் படை ட்ரோன்களின் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் விளக்கம்
இதில் ஈரானிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக்கின் ஹஷித் அல்-ஷாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு அஹ்தி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்கு அமெரிக்கா உடனடியாக உரிமைகோரியது மாத்திரமல்ல "வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பேரில், காசிம் சுலைமானியை கொல்லும் முடிவும் எடுக்கப்பட்டது.
உலகின் எந்த மூலையில் அமெரிக்கர்கள் இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்கப் பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் இத்தாக்குதலுக்கு விளக்கமளித்திருந்தது.
இவ்வாறு அரபு உலகத்தின் முக்கிய ராணுவத் தலைவர்களும் அணு விஞ்ஞானிகளும் பல்வேறு இடங்களில் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமிய உலகத்தில் மேற்குலகத்தவர்களுக்கு சவாலாக எழுந்து நின்ற தலைவர்களும் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள்.
இஸ்லாமியர்களின் போராட்டம்
இப்போது வளர்ந்து வருகிறவர்களும் தொடர்ச்சியாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனியும் கொல்லப்படுவார்கள்.
இத்தகைய போக்கை அவதானிக்கின்றபோது வளர வளர வெட்டுதல் அல்லது கத்தரித்தல் என்ற ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முகாமைத்துவத்தை மேற்குலகம் இஸ்லாமிய உலகத்தின் மீது கையாளுகின்றது என்பது புலனாகிறது.
எனவே, மத்திய கிழக்கிலும் மத்திய கிழக்கின் கடற்கரையேரமான செங்கடலிலும், ஏடன் வளைகுடாவிலும் இன்று ஏற்பட்டிருக்கின்ற யுத்த சூழல் என்பது உலகளாவிய பொருளியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.
இஸ்லாமிய உலகம் வாஸ்கோடகாமா யுகத்தின் கடல் ஆதிக்கத்தினால் முற்றுகையிடப்பட்டிருந்தாலும் அவர்களுடைய நிலம் அமைந்துள்ள கேந்திரத்தானம் என்பது எப்போதும் நிலையானதும், அவர்களுக்கு சாதகமானதும் கூட.
எனவே அத்தகைய சாதகமான கேந்திர ஸ்தானத்தில் நிலைபெற்றுள்ள இஸ்லாமிய மக்கள் அல்லது இஸ்லாமிய அரசுகள் தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்கும், தம்மை நிலை நிறுத்துவதற்கு தொடர்ந்து அந்த பிராந்தியத்தில் போராடுவார்கள்.
இன்று சியா முஸ்லிம் வகுப்பை சார்ந்த ஹவுதி இயக்கம் செங்கடலிலும், ஏடன் வளைகுடாவிலும் மேற்குலகம் சார்ந்த நாடுகளின் கப்பல்களை தாக்குகிறார்கள் என்றால் அது இஸ்லாமிய உலகத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்பு யுத்தமாகவே அவர்களால் நோக்கப்படுகிறது.
மேற்குலக எதிர்ப்பு நாடுகள்
அவரவர் நிலத்தை பாதுகாப்பதற்கும் அவரவர் நலன்களை அடைவதற்குமாகவே யுத்தங்கள் தேவைப்படுகின்றன என்பதுதான் உண்மை.
ஐரோப்பியர்களின் கடல்சார் ஆளுகைக்கு சவாலாக மத்திய கிழக்கிலும் ஏடன் வளகுடாவிலும் சீனா தலை எடுக்கத் தொடங்கி விட்டது.
செங்கடலை ஒட்டிய நாடுகளாக ஆப்பிரிக்கா கரையில் எகிப்து, சூடான், எருத்திரியா டிபூட்டி (Djibouti), சோமாலியா ஆகிய நாடகளும் ஆசியாவின் கரையில் சவுதி அரேபியா, ஏமன் ஆகிய நாடுகளும் உள்ளன. அதே நேரத்தில் சோமாலியாவும் ஏமனும் இந்து சமுத்திரத்தின் நீண்ட கடற்பரப்பையும் கொண்டுள்ளன.
இவற்றின் கடற்கரைதான் ஏடன் வளைகுடாவின் கடற்கரையோரங்களாகும். எனவே செங்கடலிலும் ஏடன் வளைகுடாவிலும் உள்ள சவுதி அரேபியா தவிர்ந்த ஏனைய நாடுகள் மேற்குலக எதிர்ப்பு நாடுகளாகவே பெருமளவில் உள்ளன.
எனவே மேற்குலகத்தின் இஸ்லாமிய உலகத்துக்கு எதிரான யுத்தங்கள் நடக்கின்ற போது இந்த மேற்குலக எதிர்ப்பு நாடுகள் தமது எதிர்வினைகளை ஆற்றும்.
உலகளாவிய மேலாதிக்கம்
பலஸ்தீன யுத்தத்தின் எதிர்வினைகளின் விளைவுதான் செங்கடலிலும் ஏடன் வளைகுடாவிலும் நிகழ்கின்ற யுத்தங்களாகும்.
ஆனாலும் இந்த மத்திய கிழக்கை தமது கட்டுப்பாட்டுங்கள் வைத்திருப்பதற்காக ஏடன் வளகுடாவில் பெருமளவு பிரித்தானிய - அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலை கொண்டுள்ளன.
அந்தக் கடற்பரப்பை தங்களுடைய நீர் பரப்பாகவே இன்று மேற்குலகத்தவர் கருதுகின்றனர். இது உலகளாவிய மேலாதிக்கத்தின் ஒரு பகுதி என்றே கூறவேண்டும்.
மேலும் இன்னும் ஒன்றையும் செங்கடற் பகுதியில் கவனிக்க வேண்டும். செங்கடலில் ஒரு ஒடுங்கிய நீரினை பகுதியாக (Bab al Mandeb Strait பாப் அல் மாண்டேப் நீரினை) பகுதி விளங்குகின்றது.
இதன் கிழக்கு கரையில் ஏமனும் மேற்கு கரையில் டிபூட்டி (Djibouti) ஆகிய நாடுகளும் உள்ளன. எனவே ஏமனில் உள்ள ஹவுதி இயக்கத்தினர் இந்த ஒடுங்கிய பாப் அல் மாண்டேப் பகுதியில் கப்பல்களை தாக்குவது அவர்களுக்கு இலகுவானதாக உள்ளது.
சீனாவின் கடல் ஆதிக்கம்
அத்தோடு மறு கரையில் உள்ள டிபூட்டி இன்றைய சீனச் சார்பாக இருப்பதோடு சீனாவின் தளம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தத் தளத்தின் அடிக்கட்டுமானங்கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் பிராந்தியத்தின் ஏற்பட்டிருக்கின்ற யுத்தம் சீனாவுக்கு ஒரு பின்னடைவியை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை வியூகத்தில் கோகோ தீவு, அம்பாந்தோட்டை துறைமுகம், மாலதீவு, கூவாதர்துறைமுகம், என்ற வரிசையில் டிபூட்டி ஐரோப்பாவுக்கான நுழைவாயிலாக சீனாவுக்கு விளங்கவல்லது.
அந்த இடத்தில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற யுத்தம் என்பது இந்தப் பிராந்தியத்தை மேற்குலகத்தாரின் கழுகு கண்களுக்கும், கொடுக்குப் பிடிக்கும் உட்படுத்தி இருக்கிறது.
எனவே சீனாவினுடைய கடல் ஆதிக்க விஸ்தரிப்பு தற்போது டிபூட்டியில் பெரும் பின்னளவை இப்போது சந்தித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 13 February, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.