துபாயில் உள்ள உலகளாவிய அவசரகால தளவாட மையத்தின் செயல்பாடுகளை நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, துபாயில் உள்ள தனது உலகளாவிய அவசரகால சுகாதாரத் தளவாட மையத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற சூழல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், போர் சூழல் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் வழங்கப்படும் அவசரகால மருத்துவ உதவிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
வான்வெளி மூடல்கள்
கடந்த ஆண்டில் மட்டும் இந்தத் துபாய் தளம் வழியாக 75 நாடுகளுக்கு 500-க்கும் மேற்பட்ட அவசரகால மருத்துவ பெறுவனவு கட்டளைகள் கையாளப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய இயக்குநர் ஹனான் பால்கி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலை, வான்வெளி மூடல்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளுக்கான போக்குவரத்துத் தடைகள் காரணமாக, மனிதநேய அடிப்படையிலான மருத்துவ விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சுமார் 18 மில்லியன் டொலர் மதிப்புள்ள சுகாதாரப் பொருட்கள் மக்களுக்குச் சென்றடைய முடியாமலும், 8 மில்லியன் டொலர் மதிப்புள்ள சரக்குகள் இந்த மையத்தைச் சென்றடைய முடியாமலும் முடங்கிக் கிடக்கின்றன.