அநுர ஆட்சியில் பாதுகாப்பு சவாலா..! பாதாள உலகக் குழுக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
ஜனநாயகத்தையும் நாட்டின் கலாசார உரிமைகளையும் சீரழிக்கும் வகையிலேயே இந்த அரசு செயற்பட்டு வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக்கும்பலின் தலையீடு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசைத் தவிர நாட்டின் ஏனைய அனைத்துத் தரப்பினரும் தற்போதைய அபாயகரமான சூழ்நிலையை உணர்ந்துள்ளனர். நாட்டில் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக, பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளைக் கூட சுதந்திரமாக நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் பதிலாக ஊர்வலங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகின்றது.
பாரம்பரிய ஊர்வலங்களில் என்னென்ன கலாசார அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதை பாதாள உலகக் குழுக்களா தீர்மானிக்கின்றன?
நீதிபதிகளின் வயது எல்லை அதிகரிப்பு
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சி, நீதித்துறையை முழுமையாகத் தங்களது அரசமைப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட செயலாகும்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச அமைப்புகள் மற்றும் நீதிபதிகள் சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அரசு தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி இதனை நிறைவேற்ற முயல்கின்றது.

அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்துத் தைரியமாகச் செயற்படும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மீது, ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே அச்சங்கம் குரல் கொடுத்து வருகின்றது. நாடாளுமன்றத்தைக் கூத்து மேடையாக மாற்றாமல், சீர்குலைந்து வரும் தேசிய பாதுகாப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசு உடனடியாக முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி விவகாரம்.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி வெளியிட்டுள்ள பதிவு