கிளிநொச்சியில் சில வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்தி சங்கத்தினர், கிளிநொச்சி பகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து நேற்றையதினம் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வர்த்தக சங்கத்தின் தீர்மானத்தை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் ஒருசில வர்த்தக ஸ்தாபனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாப்பின் பிரகாரம் தீர்மானம்
இது குறித்து வர்த்தக சங்கத்தின் உப தலைவர் கருத்து தெரிவிக்கையில், ''திருத்தகம், மருந்தகம் மற்றும் உணவகம் ஆகிய முக்கிய சேவைகளை செய்யும் வர்த்தக ஸ்தாபனங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக ஸ்தாபனங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுமாறு வர்த்தக சங்கத்தினால் யாப்பின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்பட்டது.
எமது சங்கத்தின் பகுதிக்கு 636 கடைகள் உள்ளன. அதில் நான்கு கடைகள் மாத்திரம் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்து வியாபார நடவடிக்கைகளை ஈடுபடுகின்றனர்.
அத்துடன் அதிகூடிய இலாபம் ஈட்டும் நோக்குடன் பொருட்களை விற்பனை செய்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். ஆகவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஏனைய கடையின் உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
எதிர்ப்பு
அனைவரும் இணைந்து கடைகளை பூட்டுமாறு அவர்களுக்கு கூறியும் அவர்கள் அதனை செவிமடுக்காமல் செயல்படுகின்றனர்.
திறந்திருக்கின்ற கடைகளில் கஞ்சா வியாபாரம், ஹெரோயின் வியாபாரம், சமூக சீர்கேடான விடயங்கள் அதிகம் நடப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.
அதனடிப்படையிலும், வேலை செய்கின்ற பணியாளர்களுக்கு ஒரு விடுமுறை வேண்டும் என்ற அடிப்படையிலுமே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு பதில் கூற வேண்டிய ஒரு தரப்பினராக நாங்கள் உள்ளோம். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்து வியாபார நடவடிக்கைகள் ஈடுபடும் இந்த கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.





