மினசோட்டாவில் குடியேற்ற அமுலாக்க அதிரடி நடவடிக்கை நிறைவு: ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த தீவிர குடியேற்ற அமுலாக்க அதிரடி நடவடிக்கை முடிவுக்கு வருவதாக ஜனாபதி டொனால்ட் ட்ரம்பின் எல்லை விவகாரங்களுக்கான விசேட அதிகாரி டொம் ஹோமன் தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ விலக்கல்
ஜனாதிபதி ட்ரம்பின் ஒப்புதலுடன் இந்த அதிரடி சோதனைகள் நிறுத்தப்படுவதாகவும், இதற்கான அதிகாரபூர்வ விலக்கல் பணிகளை மேற்பார்வையிட தாம் இன்னும் சில நாட்கள் மினசோட்டாவில் இருக்கப்போவதாகவும் ஹோமன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நடவடிக்கை மூலம் இதுவரை 4,000க்கும் மேற்பட்ட ஆவணமற்ற குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது ரெனி குட் (Renee Good) மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி (Alex Pretti) ஆகிய இரண்டு அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே மற்றும் ஆளுநர் டிம் வால்ஸ் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உள்ளூர் சிறைகள் மற்றும் சட்ட அமுலாக்கத் துறையினர் பெடரல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஒப்புக்கொண்டதால் இந்த படை குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது.