அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி கிழக்கில் வாகன பேரணி
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் அனோஜன் சிவராசாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோரி, ஈழத் தமிழர் முன்னணி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனப் பேரணி மற்றும் கையெழுத்துப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டது.
கட்சியின் தலைவர் ஜெயா சரவணாவின் வழிகாட்டலின் கீழ், கட்சியின் முதல் நடவடிக்கையாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாகன பேரணி
கிரானில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமான வாகனப் பேரணி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்கா மற்றும் பிரதான பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் கையெழுத்துகளை சேகரித்தது.

இதனைத் தொடர்ந்து ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை, கிரான், வாழைச்சேனை, வாகரை, வெருகல் மற்றும் ஆரையம்பதி ஆகிய பகுதிகளின் ஊடாக பேரணி முன்னெடுக்கப்பட்டு, திருகோணமலை நகரை சென்றடையவுள்ளது.
சேகரிக்கப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய ஆவணங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநரிடம் இன்று கையளிக்கவுள்ளதாக போராட்டத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும்.