திலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு நடிகர் சத்யராஜ் கடும் கண்டனம்
தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு தென்னிந்திய நடிகர் சத்யராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,
திலீபன் உண்ணாவிரதப் போராட்டம்
12 நாட்கள் உண்மையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழீழத்தின் விடுதலைக்காக தனது உயிரைத் தியாகம் செய்தவர் திலீபன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய ஆயுதப் போராளியாக இருந்தபோதிலும், திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்ததாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கூறிய அவர், சிலை அகற்றப்பட்டதன் மூலம் திலீபனின் தியாகம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மேலும் ஆழமாகப் பதியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திலீபனின் கனவான தமிழீழம் வென்றே தீரும் எனக் குறிப்பிட்ட சத்யராஜ், அதனை நோக்கி அனைவரும் பயணிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
“வெல்க திலீபனின் தியாகம்” எனக் கூறி தனது கருத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.