உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வத்திகானின் இராஜதந்திரம்!
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் எதிரொலிகள் எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்தப்படக்கூடும்.
இந்த அறிக்கையில் உள்ள மறைக்கப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்ட விடயம் எந்த சூத்திரதாரிகளை அடையாளப்படுத்தும்?, எந்த பின்புலங்களை அம்பலப்படுத்தும்? என்ற எதிர்பார்ப்புக்களுக்கும் கேள்விகளுக்கும் அவை பதிலாகக்கூடும்.
இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற இந்த சதி திட்டத்தினை சர்வதேசமும் கண்காணித்து வரும் பின்னணியில் வத்திக்கானும் தாக்குதல் தொடர்பில் தனது இராஜதந்திர கண்ணோட்டத்தை திருப்பியுள்ளதாக அறிய முடிகிறது.
விசுவாசத்தின் நாயகர்கள்
வத்திகானை பொறுத்தவரையில் இது ஒரு சாதாரண அரசியல் சண்டையல்ல. கத்தோலிக்கத்தின் நற்பெயர், ஆன்மீக நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படையான தார்மீக வேதனையின் உயரிய வலியின் ஒரு அங்கமாகும்.
இதனடிப்படையிலேயே வத்திக்கான் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளை கவனித்துக் கொண்டிருக்கிறது என கூறியாகவேண்டும்.
குண்டுவெடிப்பில் இறந்த 167 பேரை "விசுவாசத்தின் நாயகர்கள்" என்று வத்திக்கான் பெயரிட்டுள்ள நிலையில், அதன் பார்வை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மீதான கண்ணோட்டத்தை எங்கும் திருப்பிவிடவில்லை என கூறுகிறது.
''நீதியின் மீதும், உங்கள் மக்களின் மீதும் உள்ள அன்பின் மீதும், இந்த நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்பதை ஒருமுறை தெளிவுபடுத்துங்கள். இது உங்கள் மனசாட்சிக்கும் நாட்டிற்கும் அமைதியைக் கொண்டுவரும்," என்று வத்திகான் இலங்கையிடம் முன்னதாக வெளிப்படுத்தியிருந்தது.
தற்போது மரணத்தை தழுவியுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நீதி மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான மறைமுக அழைப்புகளை விடுத்தார்.
இந்நிலையில், மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரை அணுகுவது குறித்தும் வத்திக்கான் ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இலங்கைக்குள், கர்தினால் மல்கம் ரஞ்சித்திடமிருந்தும் அதிக கேள்விகள் அரசாங்கத்தை நோக்கி கேட்கப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் சில விடயங்களை அம்பலப்படுத்துவதாக கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு ஆதரவாக முன்னிலையாகியுள்ளார்.
கம்மன்பிலவின் கருத்துக்கள் வெளிவந்த நேரம் தற்செயலானது அல்ல என்று கூறவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய அரசாங்கம் தனது தீவிர அணுகலை முன்னெடுக்க சில தினங்களுக்கு முன்னர் அதற்கான அழுத்தங்களை வழங்கிய அரசியல்வாதியாக அவர் காணப்பட்டார்.
ஆனால் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபராக கருதப்படும் பிள்ளையானை ஆதரிக்கும் நபராக கம்மன்பில மாறியுள்ளார்.
பிள்ளையானை CID மீண்டும் விசாரணைக்கு உட்படுத்திய நிலையில், படுகொலைக்கு பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
கேள்விகள்
ஏப்ரல் 21, 2019க்கு முன்னதாக இந்த தாக்குதல் திட்டம் யாருக்கு என்ன தெரியும்? என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
இராணுவ உளவுத்துறை கண்காணிப்பை திரும்பப் பெற உத்தரவிட்டது யார்? என்பது பற்றியும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
சில சந்தேக நபர்கள் ஏன் விவரிக்க முடியாத வகையில் விடுவிக்கப்பட்டனர்? என்பது பற்றியும் கேள்வி எழுப்ப்படுகிறது.
அந்த வலையில், பிள்ளையானின் பெயர் அடிக்கடி வருவது தற்செயலானது என்று சொல்ல முடியாது.
அவர் ஒரு பெரிய மூடிமறைப்பின் ஒரு பகுதியாக இருந்தாரா? சாத்தியமான அச்சுறுத்தல்கள் பற்றி அவருக்குத் தெரியுமா? என்பது மறு பக்க கேள்வி.
அரசாங்க விளக்கம்
இந்நிலையில் கம்மன்பிலவின் செயல்பாடுகள் குறித்தும் அநுர அரசாங்கம் சில விளக்கங்களை வழங்கியுள்ளது.
கம்மன்பிலவின் பிள்ளையான் தொடர்பான கேளிக்கைகளால் விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த விசாரணைக்கு இதுபோன்ற அற்ப விடயங்களை கருத்தில்கொள்ள முடியாது. இந்த விசாரணைகள் அதிக நிபுணத்துவம் கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த குழுவால் நடத்தப்படுகின்றன. இந்த விசாரணைகளுக்கு ஒரு துளி கூட தீங்கு விளைவிக்காது. அவ்வளவுதான் என நளிந்த விவரித்துள்ளார்.
மேலும், தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவர்களை அம்பலப்படுத்தும் பொறுப்பை குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதிமன்றங்களிடம் ஒப்படைப்போம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
“விசாரணைகள் முறையாக நடைபெற்று வருகின்றன. சரியான திகதிகளை வழங்குவது சாத்தியமில்லை. நாங்கள் ஆணையின்படி செயல்படுகிறோம்.
இந்த சதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டவர்களின் அமைதியின்மை குறித்து அரசாங்கம் கவலைப்படவில்லை.
எதிர்காலத்தில் கம்மன்பில பாணியிலான அமைதியின்மை மேலும் மேலும் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அந்த அமைதியின்மையில் கவனம் செலுத்தவில்லை.
விசாரணைகள் முறையாக நடைபெற்று வருகின்றன” என்றும் நளிந்த கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை மிகவும் சிக்கலான பணி என்றும் அமைச்சர் கூறினார்.
அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன என்றும் அவர் விளக்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை
மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை முக்கிய விடயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறல் தொடர்பிலான அழுத்தங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருக்கின்றன என்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரஞ்ச் இந்த அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயல்முறையை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |