வசந்த கரன்னாகொட வழக்கில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கடும் குற்றச்சாட்டு
அமெரிக்காவுக்குள் நுழைய தமக்கும், தமது மனைவிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையின்மூலம், மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பீல்ட் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவரும், அவரது மனைவியும் அமெரிக்காவுக்குள் நுழைய தகுதியற்றவர்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த மாதம் 26ஆம் திகதி அறிவித்தது.
இந்த நிலையில், குறித்த தீர்மானமானது, உரிய நடைமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாக சட்டரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், அமெரிக்க இராஜாங்க செயலாளர் தமக்கு எந்த அறிவித்தலையும் வழங்கவில்லை என அமெரிக்க தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை நீதியின் அடிப்படைகள் மீறில்
அத்துடன், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், தமது அவதானிப்புகள் எதுவும் வினவப்படவில்லை என்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கூறியுள்ளார்.
எனவே, இதன்மூலம், உலகின் அனைத்து நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் அடிப்படைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், தாமோ, தமது மனைவியோ 14 ஆண்டுகளாக அமெரிக்க விசாவுக்கு
விண்ணப்பிக்கவில்லை என்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட
குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அமெரிக்க தூதுவர் தமக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை
ஏற்றுகொள்ளப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.