இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யா உக்ரைன் மீது இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,
‘அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் மற்றும் உக்ரைனில் இரசாயன ஆயுத மேம்பாடு பற்றிய ரஷ்யாவின் கூற்றுகள் ஆபத்தமானவை.
இந்த பொய்யான கூற்றுகள், மேற்கொண்டு அவர்கள் நடத்தவிருக்கும் காரணமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்தக் கூறும் வெளிப்படையான தந்திரம்’ என கூறினார்.
உக்ரைனிய ஆய்வகங்களுடன் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதில் அமெரிக்கா இணைந்து செயற்படுகிறது என்று பல ஆண்டுகளாக ரஷ்யா தனது குற்றச்சாட்டை முன்வைத்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை, ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் கடந்த பெப்ரவரி 24ஆம் திகதிக்கு முன், பிளேக், காலரா, ஆந்த்ராக்ஸ் மற்றும் பிற நோய்க்கிருமிகளின் மாதிரிகளை அழிக்க உக்ரைனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டதைக் காட்டும் ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக ரஷ்யா கூறியது.
ரஷ்யப் படைகளால் உக்ரைனில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆவணங்கள் பென்டகனால் நிதியளிக்கப்பட்ட இராணுவ உயிரியல் திட்டங்களின் ஆதாரங்களை அழிக்க அவசர முயற்சி என்பதைக் காட்டுவதாக ரஷ்ய தரப்பால் கூறப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.