சீன மருந்து ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா தளர்த்தல் நடவடிக்கை
சீனாவின் மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் பெரும்பாலான உரிம ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு, அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான புதிய விதிமுறைகளை அமெரிக்க திறைசேரி திணைக்களம் தயாரித்து வருகின்றது.
தொற்றுநோய்க்காரணிகள் அல்லது ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளைத் தவிர்த்து, சீனாவில் முன்னெடுக்கப்படும் ஏனைய புதிய மருந்து கண்டுபிடிப்புகளில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய இந்த புதிய வரைவு வழிவகுக்கும்.
இது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இந்த முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தகக் கட்டுப்பாடு
முன்னதாக, சீனப் பொருட்களுக்குக் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்திருந்த போதிலும், மருந்துத் துறையில் அவ்வாறான தீவிரக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என ஃபைசர் (Pfizer) போன்ற முன்னணி அமெரிக்க மருந்து உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சீன மருந்துத் துறையை முற்றாகத் தடைசெய்வது, புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகளை அமெரிக்கா சென்றடைவதைத் தடுக்கும் என அவர்கள் வாதிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்தத் தளர்த்தலுக்கு அமெரிக்காவின் சில அரசியல்வாதிகளும், சிறிய அளவிலான உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
தேசிய பாதுகாப்பு
சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய கோடிக்கணக்கிலான டொலர் ஒப்பந்தங்கள், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், மருத்துவத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும் என சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிர்வரும் வாரம் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இப்புதிய விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்றது.