பதற்றத்தை தணிக்க அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு - நெருக்கடியில் 2,000 அதிகாரிகள்
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் குவிக்கப்பட்டிருந்த ஃபெடரல் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளில் 700 பேரை திரும்பப்பெறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எல்லை சார் அதிகாரி டொம் ஹோமன் இன்று அறிவித்துள்ளார்.
மினியாபோலிஸில் தற்போது சுமார் 3,000 அதிகாரிகள் பணியில் உள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் 700 பேர் நீக்கப்பட்டு, மீதமுள்ள 2,000 ஐசிஇ (ICE) மற்றும் ஃபெடரல் அதிகாரிகள் அங்கேயே தங்கியிருப்பார்கள்.
சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க குடிமக்கள்
உள்ளூர் பொலிஸ் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பைப் பொறுத்தே எஞ்சியிருக்கும் அதிகாரிகளைத் திரும்பப் பெறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என ஹோமன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஃபெடரல் அதிகாரிகளால் ரெனி குட் (Renee Good) மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி (Alex Pretti) ஆகிய இரண்டு அமெரிக்க குடிமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வெடித்த பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
"இது சரியான திசையை நோக்கிய ஒரு படி. இருப்பினும், படைகளை இன்னும் வேகமாகவும், பெருமளவிலும் திரும்பப் பெற வேண்டியது அவசியம்," என்று அவர் கூறினார்.
அமெரிக்க குடிமக்களின் மரணம் குறித்து விசாரணை
மேலும், உயிரிழந்த அமெரிக்க குடிமக்களின் மரணம் குறித்து மாநில அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மினியாபோலிஸில் ஃபெடரல் படைகளின் அத்துமீறல்கள் மற்றும் 'ஆபரேஷன் மெட்ரோ சர்ஜ்' (Operation Metro Surge) நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
ஹோமனின் இந்த அறிவிப்பு பதற்றத்தைத் தணிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், முழுமையான படை வெளியேற்றத்தையே மக்கள் கோரி வருகின்றனர்.