உக்ரைனை குறிவைத்து தாக்கிய ரஷ்யா - இருளில் மூழ்கிய நகரங்கள்
உக்ரைனின் வலுசக்தித் துறையைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தீவிரத் தாக்குதல்களால், தலைநகர் கிவ் உட்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
சுமார் -20°C வரை குளிர் நிலவும் சூழலில், கிவ் நகரில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின்சாரம் மற்றும் வெப்ப வசதியின்றி (Heating) முடங்கியுள்ளன.
பழுதடைந்த மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்க 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கூடாரங்கள் அமைத்து தஞ்சமடைந்துள்ள மக்கள்
கடும் குளிரைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடாரங்கள் அமைத்துத் தஞ்சமடைந்துள்ளனர்.

கிழக்கு உக்ரைனின் துருஷ்கிவ்கா (Druzhkivka) நகரில் உள்ள ஒரு சந்தை மீது ரஷ்யா நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.
இதேபோல் ஸப்போரிஸியா (Zaporizhzhia) பகுதியில் நடந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கார்கிவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்று மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்குப் பாரிய சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதி பேச்சுவார்த்தை
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை "நாகரீகமற்றது" மற்றும் "மிகவும் கொடூரமானது" என பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் கடுமையாகச் சாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒரு வாரம் தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த ரஷ்யா, தற்போது மீண்டும் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் அபுதாபியில் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், எல்லையில் நிலப்பகுதிகளைக் கையகப்படுத்துவது தொடர்பான சிக்கல்களால் அமைதி உடன்படிக்கையில் இன்னும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.