ஐஎஸ் தீவிரவாதக் குழுக்களின் முகாம்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ் (IS) தீவிரவாதக் குழுக்களின் முகாம்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
கிறிஸ்துமஸ் தினமான நேற்று ( 25) இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்கவே இந்தத் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதக் கழிவுகள்" என்று தீவிரவாதக் குழுக்களைச் சாடியுள்ள ட்ரம்ப், இது ஒரு துல்லியமான மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்
இந்தத் தாக்குதல் நைஜீரியாவின் சோகோடோ (Sokoto) மாநிலத்தில் உள்ள தீவிரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது.

அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட சுமார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட 'டொமாஹாக்' (Tomahawk) ஏவுகணைகள் இந்த முகாம்களைத் தாக்கி அழித்தன.
இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஆபிரிக்கப் படைப் பிரிவு (AFRICOM) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு 'லகுராவா' (Lakurawa) எனப்படும் புதிய ஐஎஸ் தீவிரவாதக் கிளைக் குழுவே முக்கிய இலக்காக இருந்ததாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்துப் பேசிய நைஜீரிய வெளியுறவுத் துறை அமைச்சர் யூசுப் மைதாமா துக்கார், இது இரு நாடுகளும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கை என்றும், இதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
நைஜீரியா வழங்கிய உளவுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த சில வாரங்களாகவே நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அடக்க அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்து வந்த நிலையில், தற்போது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri