பெறுமதியான பொருட்களுக்கான வரிக்குறைப்பிற்கு அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தமக்கிடையே இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கு உடன்பாடு கண்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங் ஆகியோருக்கு இடையே அண்மையில் வொஷிங்டனில் இடம்பெற்ற உயர்மட்ட உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, உணர்திறன் அற்ற பொருட்களுக்கான வரிக் குறைப்பில் இரு நாடுகளும் தலா 30 பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிப் பொருட்களை உள்ளடக்கியுள்ளன.
வரி
இந்த உடன்படிக்கையின் கீழ், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோளம், கோதுமை, இறைச்சி, பால் பொருட்கள், மரப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கான வரிகளைச் சீனா குறைக்கவுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் பிரதான ஏற்றுமதிப் பொருளான சோயாபீன்ஸ் இந்த வரிக்குறைப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பதிலுக்கு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் சிறுவர்களுக்கான வாகன ஆசனங்கள் போன்றவற்றுக்கான வரிகளை அமெரிக்கா குறைக்கவுள்ளது.
பேச்சுவார்த்தை
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நிறுத்தமானது எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் 10 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை இறக்குமதி செய்யவும், செயற்கை நுண்ணறிவு, நிதிச் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை விரிவாக்கம் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.