பல்கலைகழக மாணவர்களுக்கும் இளைஞர் குழுவுக்கும் இடையில் கடும் மோதல் - மூவர் மருத்துவமனையில்
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கும் உள்ளூர் இளைஞர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மூன்று மாணவர்கள் கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவர்களில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஜித மலலசேகரவும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர், கால்நடை மருத்துவ பீட மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் எட்டு மாணவர்களுடன், நேற்று முன்தினம் மதியம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உருகொட்டுவ கோட்டைக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகச் சென்றிருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்
மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர் இளைஞர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திற்கு வந்து பல்கலைக்கழக மாணவர்களை கேலி செய்யத் தொடங்கியதை அடுத்து மோதல் தொடங்கியதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவர்களின் அறிவிப்பின் பேரில், கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
நான்கு பேர் கைது
இதன் போது அப்பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் உடைந்த போத்தல்களால் அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளான மூன்று மாணவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கால்நடை மருத்துவ பீட மாணவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரித்த பேராதனை பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளது.