அமெரிக்கா ஈரான் இடையே வலுக்கும் போர் மேகம் : வளைகுடா நாடுகளில் உருவாகியுள்ள பதற்றம்
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பலமுறை இது குறித்துப் பேசியுள்ளமை தொடர்பாக செய்திகளும் வெளியாகி இருந்தன.
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது அமெரிக்காவிற்குள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கருத்தாகவும் உள்ளது.
திரைக்குப் பின்னால் சவூதி அரேபியா
இந்நிலையில், ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கர்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் என்று அரபு நாடுகள் அஞ்சுவதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது.

பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்த குறுகிய கடல் பகுதி, ஈரானை அதன் அரபு அண்டை நாடுகளிடமிருந்து பிரிக்கிறது.
உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது.
எந்தவொரு சாத்தியமான தாக்குதலிலும் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்றும் ஈரானை தாக்க அமெரிக்கா தங்களின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் ஈரானுக்கு சவூதி உறுதி அளித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.
சவூதி அரேபியா ஈரானின் போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் சவூதி அரேபியா, ஓமான் மற்றும் கட்டார் ஆகியவை ஈரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் உலகளாவிய எண்ணெய் சந்தைகளுக்கு பெரிய இடையூறுகளை ஏற்படுத்தி இறுதியில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்காவை நம்ப வைக்க முயற்சிக்கின்றன என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை
இந்த நாடுகள் தங்கள் சொந்த நாடுகளில் ஏற்படக்கூடிய எதிர்வினை மற்றும் உறுதியற்ற தன்மை குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், யார் அதனுடன் நிற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரானின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யாவும் சீனாவும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இரு நாடுகளும் வாய்மொழியாக மட்டுமே தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் என கருதப்படுகிறது. ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அங்குள்ள அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஜி-7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
"கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர்களுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளாகிய நாங்கள், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |