சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்?
இந்தோ - பசிபிக் பிராந்தியம் 21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ஆளுகைப் போட்டியின் மையமாக மாறிவிட்டது.
சீனாவின் எழுச்சி அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தைப் சவாலுக்கு உட்படுத்தியுள்ளமை, இந்தியாவின் பிராந்திய எழுச்சிக்கு தடையாக உருவெடுத்தமை, மத்திய கிழக்கு, கிழக்கு ஆபிரிக்க பிராந்தியத்தின் உறுதியற்ற குழப்பகரமான அரசியல், பொருளியல் போக்கு ஆகியவை இந்த பிராந்தியத்தை பெரும் சக்திகளின் மூலோபாய போட்டி மண்டலமாக மாற்றியுள்ளன.
இந்த சூழலில் அரசியல், இராணுவ, மற்றும் பொருளாதார சக்திவளத்துடன் இணைந்த மத்தியகிழக்கு பாலஸ்தீன யுத்தம் இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியின் பிரதான நுழைவாயிலான ஏடன் வளைகுடா பகுதியில் மேற்குலகின் அதிகார ஆளுகையை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவே விடுதலை கோரிய ஒரு இஸ்லாமிய பிரதேசமான சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்து தனக்கான ஒரு புதிய மூலோபாய முன்னணியை(strategic front) அல்லது ஆடுகளத்தை திறந்துள்ளது.
ஏடன் வளைகுடாவின் அரசியல் அமைவிடம்
எடன் வளைகுடாவில் அமெரிக்கா சார்ந்த மேற்குலகமும் மற்றும் சீனா என்ற பெரும் பொருளாதார சக்தியின் போட்டியும் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பிராந்தில் முக்கியமான அரசியல், பொருளியல், ராணுவ சக்தியாகவும், அதேநேரம் ஒரு சிறிய நாடுமான இஸ்ரேல் மூலோபாய ரீதியாக முக்கியமான நாடாகவும் செயல்படுகிறது.

அதன் அடிப்படையில், இஸ்ரேலின் இலக்குகள் மற்றும் மூலோபாய செல்வாக்கு, அதன் புவியியல் கேந்திரத்தனம், மற்றும் புவிசார் அரசியல், பொருளாதரம், பாதுகாப்பு சார்ந்ததும் அதனோடு இணைந்த உலகம் தழுவிய அரசியல் என்பவற்றை அரசியல் புவியியல் (Political Geography) பார்வையில் எடைபோடுவது அவசியமானது.
இஸ்ரேலின் புவியியல் அமைவிடம் என்பது மத்திய கிழக்கில் மத்தியதரைக்கடல் ஓரமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் இழந்துபோன தமது தாயக நிலத்திற்கு 2000 ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திரும்பி வந்து பலம் பொருந்திய இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் 14மே 1948ல் யூதஅரசு உருவாக்கப்பட்டு 01 மே 1949ஆம் ஆண்டு அங்கீகாரிக்கப்பட்டது.
இன்றைய இஸ்ரேலின் அதிகாரபூர்வமான நிலப்பரப்பு 22,072 சதுர கிலோமீட்டர்கள். (அதில் கிழக்கு ஜெரூசலம் மற்றும் கோலான் உயரமலைகள் சேர்த்ததாக) ஆனால் 1967ஆம் ஆண்டுக்கு முன் வரையறுக்கப்பட்டதன்படி “சுயாதீன இஸ்ரேல்” நிலப் பரப்பு 20,770 சதுர கிலோமீட்டர்கள் தான்.
இஸ்ரேலின் தரை எல்லை எதிரி நாடுகளான லெபனானுடன் 81கி.மி, சிரியாவுடன் 83கி.மி, ஜோர்டனுடன் 327கி.மி, எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் 20கி.மி நீளமான நில எல்லைகளை கொண்டுள்ளது.
இஸ்ரேலின் இரண்டு கடற்கரை எல்லைப் பகுதிகள் உள்ளன. ஒன்று மத்தியதரைக்கடல் கடற்கரையில் சுமார் 194 கி.மி நீளத்தையும், செங்கடலின் ஓரு பகுதியான ஆகாபா வளைகுடாவில் (Gulf of Aqaba) குறுகிய சுமார் 14 கி.மி நீளமாக கடற்கரையையும் கொண்டுள்ளது.
போருக்கான முக்கிய காரணம்
ஆகாபா வளைகுடாவில் உள்ள இஸ்ரேலின் ஈலாத்(Eilat) துறைமுகத்திலிருந்து தெற்கே 85கி.மி தூரத்தில் திரான் நீரிணை (Straits of Tiran) ஊடாக செங்கடலுக்குச் செல்லும் கடற்பாதையின் கிழக்குப்புறம் ஜோர்டனும், மேற்குப்புறம் எகிப்தும் உள்ளன.

செங்கடலுக்கான நுழைவாயிலான திரான் நீரிணை ஈலாத் துறைமுகத்தின் உயிர்நாடி. திரான் நீரிணையை எகிப்து மூடியமை தான் 1956 மற்றும் 1967 போர்களுக்கான(Six-Day War) முக்கிய காரணிகளில் ஒன்று.
இஸ்ரயேலின் மொத்த மக்கள் தொகை சுமார் 10.1 மில்லியன். இதில் யூதர்கள் சுமார் 7.77 மில்லியன் (76.3%) அரபு குடிமக்கள் சுமார் 2.147 மில்லியன் (21.1%) வெளிநாட்டு குடிமக்கள் சுமார் 0.26 மில்லியன் (2.6%) சனத்தொகை 1.1% வளர்ச்சியைக் காட்டுகிறது.
2025 கணிப்பீட்டின்படி, மத்தியகிழக்கும் - வட ஆபிரிக்க பகுதியில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 500 மில்லியன். (இது 2023-24 உலக மக்கள் கணக்கீடுகளின் அடிப்படையில்) ஆகவே 50 கோடி மக்களை உள்ளடக்கி 26 அரபு, இஸ்லாமிய அரசுகளுக்குட்பட்ட மத்தியகிழக்கின் நடுவில் அவர்களின் பொது எதிரிகளான வெறும் 77 லட்சம் யுதர்களைக் கொண்ட இஸ்ரேயல் அரசு நிலைத்து நிற்பதென்பது கற்பனைக்கெட்டாத விடயம் ஆனாலும் இஸ்ரேல் அங்கு பலமாக எழுந்து நிற்கிறது.
இஸ்ரேலின் பொருளாதாரம் மத்திய கிழக்கில் மிக வலுவானது, உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) சுமார் $430+ பில்லியனாக(2024–25 காலத்தில்) மதிப்பிடப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மருத்துவ சாதனங்கள், பாதுகாப்பு சாதன உற்பத்தி, முதலீடு மற்றும் ஆராய்ச்சி ஆகியவை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய பொருளாதார அம்சங்களாகும்.
தனித்து நின்று போராடும் இஸ்ரேல்
உலக மயமாக்கப்பட்ட தொழில் மற்றும் பொருளாதார இணைப்பு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளுக்கு வணிகம், முதலீடு மற்றும் ஆராய்ச்சி என உயர்ந்த இடத்தை வழங்குகிறது.
அதன் இராணுவ செலவு $46.5 பில்லியன் (2024–25ன் கணிப்பீடு) இது அதன் GDPயின் சுமார் 8–9% வகிக்கின்றது.
உலகின் உயர்ந்த இராணுவ செலவு விகிதங்களில் இதுவும் ஒன்று. குறிப்பிடத்தக்க பாதுகாப்பு சவால்களைக் கொண்ட ஒரு சிறிய நாடாக இருந்த போதிலும், இஸ்ரயேலின் High-Tech பொருளாதாரம் (Start-up Nation) இஸ்ரேல் உலகத்தில் “Start-up Nation” என்று அழைக்கப்படுகிறது.

ஏனென்றால், இஸ்ரேல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோரில் உலகளாவிய தர வரிசையில் அமெரிக்கா, ரஸ்சியா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா மற்றும் போன்ற பெரிய நிலையான நாடுகளை விட அதிகமான தொடக்க நிறுவனங்களை உருவாக்கியவர்கள்.
அத்துடன், உலகின் முதன்மையான 10 சைபர் பாதுகாப்பு(cyber security) நிறுவனங்கள் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டவை. Intel, Google, Microsoft, Apple, Amazon, Meta போன்ற பெரிய நிறுவனங்களின் முக்கிய ஆராய்ச்சி மையங்கள் இஸ்ரயேலில் தான் உள்ளன.
வங்கிகள், அரசுகள், ராணுவங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு software இங்கே உருவாக்கப்பட்டவை. AI மற்றும் Data Technology, ராணுவம், மருத்துவம், நிதிதுதலீடு, கண்காணிப்பு என்பவற்றில் முன்னோடிக்களாக பார்க்கப்படுகிறது. தற்போது பிரபலமாக இருக்கும் உலக AI முதலீட்டில் இஸ்ரயேல் முக்கிய கூர்முனை.
சுருக்கமாக கூறினால், யூதர்கள் தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களின் மூலகர்த்தாக்கள் எனலாம். இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் மூலோபாய சக்தி(Strategic Power) மத்திய கிழக்கில் ஈரான், யேமன் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத ஹெஸ்புல்லா, ஹமாஸ் போன்ற தீவிரவாதிகளை தனியாகவே எதிர்கொள்ளும் திறனை பெற்றுள்ளது.
சோமாலிலாந்தை அங்கீகரிப்பதற்கான காரணம்
இந்நிலையில், 2026 புதிய ஆண்டு பிறப்பதற்கு முன்னர் சோமாலிலாந்தை புதிய நாடாக அங்கீகரிப்பதற்கான உடனடிக் காரணம், ஏடன் வளைகுடா பிராந்தியத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட பலஸ்தீன யுத்தமும், செங்கடல் பகுதியில் கடற்போக்குவரத்தில் ஈடபட்ட கப்பல்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்களும், அதே நேரத்தில் ஜிபுட்டியில் உருவாக்கப்பட்ட சீனப் படைத்தள விஸ்தரிப்பும் இஸ்ரேல் ஒரு இஸ்லாமிய நாட்டை அங்கீகரிக்க வேண்டிய உடனடித் தேவையையும், நிர்ப்பந்தத்தை உருவாக்கி விட்டது.
அதன் அடிப்படையில், உலகளாவிய ஆளுகைப் போட்டிக்கு சவால் விடக்கூடிய வகையில் சீனா ஏடன் வளைகுடா நாடான ஜிபூட்டியில் சீனப்படைத்தளம் ஒன்றை அமைத்து விட்டது.

இதுவே சீனாவின் முதலாவது வெளிநாட்டு படைத்தளமாகும். கடந்த 2017ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு செயல்பாட்டத் தொடங்கியது.
இது பாப்-எல்-மாண்டெப் நீரிணைக்கு அண்டியதாகவும், ஜிபூட்டி நகரத்திற்கு அருகில் சுமார் 36 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2,000 வரையிலான சீன இராணுவ வீரர்கள் இந்தத் தளத்தில் பணியாற்றுகின்றனர்.
இந்த தளம் சீனாவின் கடல்சார் பாதுகாப்பு, கடல் கொள்ளையர்களைத் தடுக்குதல், பாப்-எல்-மாண்டெப் நீரிணை வழியாக செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் போன்ற பல நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக சீனா கூறுகிறது.
இது சீனாவிற்கு புதிய பட்டுப்பாதை திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் வணிக நலன்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஏடன் வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பு என்ற போர்வையில் சீனப் படை வீரர்கள் படைப் பயிற்சிகள், போர்ப் பயிற்சிகள் மேற்கொள்வது, கடற்படை தளங்கள் மற்றும் கப்பல் தரிப்பிடங்கள், மெக்சிகோ மாதிரியான பெரிய கப்பல்களை சரிசெய்யும் வசதிகள், விசாலமான சேமிப்புக்கிடங்கு, மருத்துவ மையம், மற்றும் ஆயுதக் கிடங்கு, செயற்கைக்கோள் தொலைநோக்கு(Satellite Communication) வசதிகள் என்பவற்றை உள்ளடக்கியதாக விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது.
சீனா படைத்தளத்தின் நோக்கம்
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளும் ஜிபூட்டியில் தங்கள் படைத்தளங்களை வைத்துள்ளன.
ஆயினும் வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசான சீனா தனது படை வலி சமநிலையை இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலைநிறுத்த முனைகிறது என்றும், சீனாவின் உலகம் தழுவிய ஆளுகையை விஸ்தரிப்பதற்கு இந்தோ-பாசுபிக் மற்றும் ஆப்பிரிக்கா வணிக வழித்தடங்களை தனது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வரவும், இதன் மூலம் ஆபிரிக்க நாடுகளின் பெரும்பாலான நாடுகளை தனது பொருளாதார மூலதாய செல்வாக்குக்குள் கொண்டு வரவும் முயற்சிக்கிறது என மேற்குலகம் பயப்படுகிறது.
ஜிபூட்டியில் உள்ள சீனாவின் படைத்தளம் என்பது பெரிய நிலையான திட்டமான Belt and Road Initiative (BRI) அல்லது New Silk Road திட்டத்திற்கான முக்கிய பங்காளிப்பாக விளங்குகிறது.
எனவே, சீனாவின் இருப்பு இந்தப் பகுதியில் மேற்குலகின் பாதுகாப்பு படைவலுச்சமநிலைக்கு சவாலாக மாறிவிட்டது.
சீனாவின் பார்வையில் Belt and Road Initiative (BRI) என்பது சீனாவின் சர்வதேச மேலாண்மை. வர்த்தக சுற்றிவளைப்பு பிணைய வலையமைப்பு திட்டமாகும்.
இது ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளை மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் தரை கடல் வழிகள் மூலம் வணிகம், போக்குவரத்து மற்றும் பணப்புழக்கத்தை விஸ்தரிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது.

ஜிபூட்டியில் உள்ள பாப்-எல்-மாண்டெப் நீரிணை என்பது உலகளவில் மிகவும் முக்கியமான எண்ணெய் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து வழியாகும். இந்த நீரிணை வழியாக சுவெஸ் கால்வாய் செல்வது காரணமாக, BRI திட்டத்தின் கடல் வழி பாதுகாப்புக்கு சீனாவிற்கு ஜிபூட்டி மிகவும் முக்கியமானது.
சீனாவின் தந்திரோபாயம்
ஆபிரிக்க மத்திய கிழக்கு பகுதிகளுக்கான நெருக்கமான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தி Belt and Road Initiative (BRI) திட்டத்தின் மூலம் சீனா ஆப்பிரிக்காவில் தனது பொருளாதார மற்றும் அரசியல் ஆளுகையை அதாவது மேலாண்மையை அதிகரித்து வருகிறது.
இதனை வளர்ச்சி குன்றிய நாடுகள் தமது வளர்ச்சிக்கான பொன்னான வாய்ப்பு என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் இது பொருளாதார அடிமைத்தனம் அல்லது கடன் பொறி அரசியல் தந்திரம்(Debt Trap Diplomacy) ஆகும்.
சீனா ஆப்பிரிக்காவில் BRI திட்ட முதலீடுகள் பெரும்பாலும் துறைமுகங்கள், சாலைப்பணிகள், ரயில் பாதைகள், மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற தளங்களுக்குப் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.
இவ்வாறு ஜிபூட்டியில் மட்டுமல்ல கென்யா, எதியோப்பியா போன்ற நாடுகளிலும் இத்தகைய பொருளாதார மூலோவாயத்தை முழுபாய ஆதிக்கத்தை செலுத்துகிறது.
இங்கு சீனாவின் கடன் வழங்கும் விதம் சில நேரங்களில் மிகப்பெரியதாக இருந்ததால் கடனை மீள்கொடுப்பனவு செய்ய முடியாமல் அந்த நாடுகள் சீனாவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடிபணிந்து சீனாவின் நிர்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
இதனை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் கடனை செலுத்த முடியாத போது சீனா துறைமுகத்தின் நிர்வாகத்தை கைப்பற்றியது போன்ற சூழ்நிலை ஆபிரிக்க நாடுகளிலும் ஏற்படலாம் என மேற்குலகம் அஞ்சுகிறது.
சீனா இந்துசமுத்திரம் பகுதியில் பல துறைமுகங்கள் மற்றும் படைத்தளங்களை உருவாக்கியுள்ளதோடு, அதன் உலகளாவிய பொருளாதார மற்றும் இராணுவத் துறைகளில் தாக்கத்தை அதிகரிக்கின்றது.

இந்து சமுத்திரம் பகுதியில் சீனா தற்போது கட்டியுள்ள முக்கிய துறைமுகங்கள் மற்றும் படைத்தளங்களை படுத்துவோமாக இருந்தால்,
1. அம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota Port) - இலங்கை 2017 ம் ஆண்டு, சீனாவின் கொடுப்பனவின் கீழ் இந்த துறைமுகம் 99 ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டது.
2. தின்ஷா துறைமுகம் (Gwadar Port) - பாகிஸ்தான் China Overseas Port Holding Company (COPHC) மூலம் சீனா, பாகிஸ்தானில் இந்த துறைமுகத்தை கட்டியுள்ளதோடு, இது CPEC (China-Pakistan Economic Corridor) திட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
3. சின்கியாங் துறைமுகம் (Cox’s Bazar Port) - பங்களாதேஷ் இந்த துறைமுகத்தில் சீனாவின் முதலீடு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
4. கீரித் துறைமுகம் (Kyaukpyu Port) - மியன்மார். இந்த துறைமுகமும் சீனாவின் வளர்ச்சி திட்டம் மற்றும் மின்சார மற்றும் போக்குவரத்து ஆதாரங்களை உருவாக்குவதில் உதவுகிறது.
5. மாஸிகாரா துறைமுகம் (Mombasa Port) - கென்யா சீனாவின் உதவியுடன் இந்த துறைமுகத்தின் மேம்பாடு செய்யப்பட்டது, இது ஐரோப்பாவுக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கிடையே வணிக பாதையை இணைக்கும்.
சீனாவின் படைத்தலங்கள்
அதே போன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் படைத்தலங்களைப் பட்டியல் படுத்துவோமாக இருந்தால்,
1. ஜிபூட்டி படைத்தளம் (Djibouti Military Base) - ஜிபூட்டி சீனாவின் முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளம்.
2. கோடோ இடம் - மியன்மார் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிரபலமான போக்குவரத்து ரயில்கள் மற்றும் படைத்தளங்கள் உள்ளிட்டவை இந்த நாட்டில் இடம் பெற்றுள்ளன.
3.இலங்கையில் சீன படைத்தளங்கள் குறித்த சரியான தகவல்கள் வெளிவராவிட்டாலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றுகின்ற ஏராளமான சீனத் தொழிலாளர்களும் அங்குள்ள கட்டட நிர்மானங்களும் அந்த துறைமுகம் எந்த நேரமும் பலத்தலமாக மாற்றப்படக்கூடிய நிலையில் உள்ளது என்பதை துணிந்து கூறலாம்.
சீனாவின் உலகளாவிய பொருளியல் பரப்புகை என்பது தற்போது Belt and Road Initiative (BRI) போன்ற திட்டங்களின் மூலம் ஒரு புதிய உலகளாவிய ஆதிக்கமாக உருவெடுப்பதோடு, 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கொலம்பஸ் மற்றும் வாஸ்கோடாகாமா யுக காலணியக் காலகட்டங்களில் ஐரோப்பியர்கள் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளை அடிமைப்படுத்தி உலகளாவிய அளுகைப்படர்ச்சி மூலம் ஐரோப்பிய அதிகார முறை நிறுவப்பட்டது.
அதே போன்று, இப்போது சீனாவின் உலகளாவிய பொருளாதார பரப்புகை Belt and Road Initiative திட்டத்தின் கீழ் சீனா தற்போது பொருளாதார ஆதிக்கம் மற்றும் பாதுகாப்பு விரிவாக்கம் என ஒரு புதிய உலகளாவிய பொருளாதார சுழற்சி உருவாக்குகிறது.
இதனால் Columbus மற்றும் Vasco da Gama era யுகத்திற்கு பதிலாக ஒரு சீனா யுகத்திற்கான இலக்கைக் கொண்டு ஒரு புதிய பொருளாதார உலகம் உருவாக்க முனைகிறது.

அந்த வழிமறையை பின்பற்றி இப்போது மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஏடன் வளகுடா பிராந்தியத்திலும் செங்கடலிலும் சீனாவின் அதிகரித்துச் செல்லும் பிடியை உடைப்பதற்கு மேற்குலம் மாற்றுத் திட்டங்களை வகுக்கத் தவறினால், சீனா தனது New World Order நோக்கை வலுப்படுத்தும்.
பொருளாதாரம், இராணுவம், அரசியல், மற்றும் கடல்வழிப் போக்குவரத்து விதிமுறை அதிகாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் சீனா முன்னிலை பெறும்.
அத்துடன், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் சீனாவின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் அதிகரிக்கும். இது மீண்டும் ஒரு இரட்டைமைய அரசியல் அதிகார ஒழுங்கை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.
இந்நிலை தோன்றினால் மேற்குலத்திற்கு மட்டுமல்ல, உலகளாவிய சமநிலைக்கு இடையூறாக அமையக்கூடும்.
எனவே, இத்தகைய நிலைமையை கட்டுப்படுத்த வேண்டியதும், தடுப்பதற்கான உடனடி முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதன் ஒரு கட்ட மூலோபாயம் தான் சுவேஸ் கால்வாயை கட்டுப்படுத்துகின்ற ஏடன் வளைகுடா பகுதியில் தமது பிடியை இறுக்குவதற்காகவே சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலான்டை இஸ்ரேல் அங்கீகரித்து தனக்கான இஸ்லாமிய நேச சக்தியை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், தற்போது முக்கியத்துவம் பெற்றிருக்கும் ஏடன் வளைகுடா பற்றிய புவியியல் மற்றும் புவிசார் அரசியல் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உள்ளது. அது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
தொடரும்...
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 13 January, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.