கிரீன்லாந்து பிரச்சினை: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டென்மார்க்கிற்கு பயணம்
டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரமான அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், நிலவும் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டென்மார்க்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிக முக்கியமானது என்று கருதும் ஜனாதிபதி ட்ரம்ப், அதை வாங்குவதற்கு அல்லது பலவந்தமாகப் கைப்பற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய இரு தரப்புமே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
டென்மார்க்கிற்கு பயணம்
பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில், செனட்டர் கிறிஸ் கூன்ஸ் தலைமையில் 11 பேர் கொண்ட இருகட்சி (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி) குழுவினர் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து தலைவர்களைச் சந்தித்தனர்.
உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வொஷிங்டனுக்குத் தெரிவிப்பதன் மூலம் தற்போதைய சூடான சூழலைத் தணிப்பதே இப்பயணத்தின் நோக்கம் என செனட்டர் கூன்ஸ் தெரிவித்தார்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது என்பதால், ட்ரம்பின் திட்டத்தை முடக்க முடியும் என குடியரசுக் கட்சி செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடிப் போக்கிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்கிற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
ஏவுகணைத் தாக்குதல்
ஒரு நேட்டோ உறுப்பினர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்துவது அந்த அமைப்பின் முடிவுக்கே வழிவகுக்கும் என டென்மார்க் எச்சரித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கிரீன்லாந்தின் பாதுகாப்பிற்கு ஆதரவாகத் தங்கள் படைகளை அங்கு அனுப்பியுள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், கிரீன்லாந்து பகுதிக்கு வான் மற்றும் கடல்வழிப் பாதுகாப்பு உதவிகள் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், கிரீன்லாந்து இயற்கை வளங்கள் மிக்கது. வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் பகுதிக்கு இடையில் இது அமைந்துள்ளதால், ஏவுகணைத் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் பாதுகாப்பு மையமாக இது திகழ்கிறது.