யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவருக்குப் பேராசிரியர்களாகப் பதவியுயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான அருட் கலாநிதி ஜே. சி. போல் றொகான், நுண்கலைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தா. சனாதனன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவை
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (01.10.2022) துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையப் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த அருட் கலாநிதி ஜே. சி. போல் றொகான், கலாநிதி தா. சனாதனன் ஆகியோரின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த, மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள், நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
பேராசிரியராக பதவி உயர்வு
அவற்றின் அடிப்படையில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறைத்
தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான அருட் கலாநிதி ஜே. சி. போல் றொகான் கிறிஸ்தவ
நாகரிகத்தில் பேராசிரியராகவும், நுண்கலைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்
கலாநிதி தா. சனாதனன் நுண்கலைத் துறையில் கலை வரலாற்று (துறைக்குரிய
இருக்கை)ப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.