ஹார்முஸ் நீரிணை மூடப்படவில்லை: ஈரான்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) குறித்து ஈரான் தனது நிலப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அமெரிக்க ஊடகமொன்று அளித்த நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக அமெரிக்கா பரப்பும் தகவல் தவறானது. இந்த நீர்வழிப்பாதை சர்வதேசப் போக்குவரத்துக்காகத் திறந்தே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈரானைத் தாக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கப்பல்களுக்கு மட்டுமே இது மூடப்பட்டுள்ளது எனவும் ஏனைய நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையில் தாராளமாகப் பயணிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானை உலக நாடுகளுக்கு எதிரான ஒரு நாடாகச் சித்தரிக்கவும், சர்வதேசப் பாதையை ஈரான் முடக்குவதாகக் காட்டி உலக நாடுகளைத் தங்களுக்கு ஆதரவாகத் திரட்டவும் அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை, ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்தும் அராக்ச்சி சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கார்க் தீவு மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட சில ஏவுகணைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து ஏவப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அமீரகத்தின் ராஸ் அல்-கைமா (Ras Al-Khaimah) மற்றும் டுபாய் நகருக்கு மிக அருகிலுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலிருந்தே இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலிருந்து தாக்குதலை நடத்துவது மிகவும் ஆபத்தானது எனவும், ஈரான் திருப்பித் தாக்கினால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வளைகுடா நாடுகள் தங்கள் நிலப்பரப்பை ஈரான் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிக்கக் கூடாது என்று அராக்ச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தனது அண்டை நாடுகளுக்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ எதிரானது அல்ல. அமெரிக்கா கூறுவது போல நாங்கள் யாருடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
எனினும் ஈரானின் இறையாண்மை மீறப்பட்டால், தாக்குதல் எங்கிருந்து தொடங்கப்பட்டதோ அந்த இடத்தைத் திருப்பித் தாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்புடைய வளைகுடா பிராந்திய எண்ணெய் ஆலைகளையும் ஈரான் குறிவைக்கக்கூடும் என அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri