பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த தீர்மானம்
பணிப்புறக்கணிப்பு - தமது பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (13) கூடிய அமைச்சரவையில் இது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துள்ளதுடன், பிரேரணையில் உள்ள விடயங்களுக்கு நிதியமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முன்மொழிவு
இதன்படி, நிதியமைச்சின் அனுமதியைப் பெற்றதன் பின்னர் அது தொடர்பான பிரேரணையை மீண்டும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தமது பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |